செங்கடலை இரத்த கடலாக மாற்ற நினைக்கிறார்கள்: துருக்கி எர்டோகன் எச்சரிக்கை
ஹவுதி படைகளை குறிவைத்து ஏமன் மீது நடத்தப்படும் தாக்குதல் சமநிலை அற்றது என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
ஏமன் மீது தாக்குதல்
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை செங்கடல் பகுதியில் தாக்குதல் மற்றும் அத்துமீறி கைப்பற்றுதல் ஆகியவற்றை முன்னெடுத்து வந்தனர்.
ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையின் இந்த அத்துமீறிய செயலால் செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக அபாயகரமானதாக மாறியது.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் படைகள் இணைந்து ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிலைகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இதில் 5 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், அமெரிக்க பிரித்தானிய படைகளின் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
துருக்கி ஜனாதிபதி எர்டோகன் எச்சரிக்கை
இந்நிலையில் ஹவுதி படையினருக்கும் அமெரிக்க-பிரித்தானிய படைகளுக்கும் இடையிலான போர் சமநிலை இல்லாதது.
அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஏமன் மீது அளவுக்கு அதிகமான தாக்குதலை நடத்தி வருகின்றனர், இதனால் செங்கடல் பகுதியை இரத்த கடல் பகுதியாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
ஆனால் ஹவுதி படையினர் தங்கள் முழு சக்திகளையும் திரட்டி விரைவில் பதிலடி அளிப்பார் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் படையை பயங்கரவாத அமைப்பாக ஏற்காத ஏமன் மற்றும் துருக்கி நாடுகளுக்கு அமெரிக்கா பிரித்தானியா நாடுகள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.