தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள் – இத்தனை சம்பவங்கள் இந்த ஒரே நாளில் நடந்தவையா?
‘பூசம் புண்ணியம் தரும்!’
இந்தியா மட்டுமின்றி உலகில் தென்னிந்தியர்கள் வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென்ஆப்பிரிக்கா, பிஜி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் போன்றே மலேசியாவிலும் தைப்பூசதினத்தன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட தைப்பூச தின வரலாற்று சிறப்புகள் சிலவற்றைக் காண்போம்.
தைப்பூச நன்னாளில்தான் உலகில் முதன்முதலில் நீரும், நீரிலிருந்து உலக உயிரினமும் தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அதனாலேயே இந்நாளில் பல்வேறு ஆலயங்களில் தெப்ப திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
முருகப்பெருமானுக்கு சூரனை வதம் செய்ய பார்வதி தேவி தன் சக்தி முழுவதையும் கொண்டு உருவாக்கிய பிரம்ம வித்யா என்ற வேல்-ஐ வழங்கி அருளிய நாள் இது.
முருகப்பெருமான் வள்ளி பிராட்டியை தைப்பூச நன்னாளில்தான் மணந்து கொண்டார் என்பது நம்பிக்கை.
தைப்பூச தினத்தன்று விரதம் இருப்பது வழக்கம். அன்று புதிதாகச் சமைத்த உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். “பூசத்தன்று பூனைக் கூட பழையதை உண்ணாது” என்ற பழமொழியும் உள்ளது.