Thirumavalavan: ‘மக்களின் துயரத்தில் அரசியல் செய்கிறார்கள்’ பாஜகவை விளாசும் திருமா!
பாஜகவினர் மக்களின் துயரத்தையும் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விட அரசியல் ஆதாயம் தேட பாஜகவினர் குறியாக உள்ளனர். பேரிடர் காலத்தில் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் கருத்து கூறுவது மிகவும் அற்பத்தனமான அரசியல் என்பதை விசிக சுட்டிக்காட்டுகிறது.
மழை வெள்ள பாதிப்புகளின் போது இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் டெல்லி சென்றதாக பாஜகவினர் முன் வைக்கும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, இது காழ்புணர்ச்சியின் வெளிப்பாடு, அவர் இந்தியா கூட்டண் தலைவர்கள் கூட்டத்தில் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அன்று மாலையே பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை எடுத்துரைத்து தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என கோரி இருக்கிறார்.
நிர்மலா சீதாராமனின் தூத்துக்குடி ஆய்வை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் அவர் எவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார் என்பதை அவரது உடல் மொழியில் இருந்து அறிய முடிகிறது. அவருக்கு தமிழ்நாட்டு மக்களின் துயரத்தை விட தமிழ்நாட்டில் திமுக அரசை விமர்சிக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்து இதுபோன்ற கருத்துகளை முன் வைத்து வருகிறார்.
அவர் மட்டுமல்ல, பாஜகவை சேர்ந்த அனைவருமே அந்த அடிப்படையில் செயல்படுகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சி அல்ல; பாஜகதான் எதிர்க்கட்சி என்று காட்டும் முனைப்பும், முயற்சியும்தான் அவரது நடவடிக்கைகளில் மேலோங்கி இருக்கிறது.
தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம், இந்தியாவில் எந்த மாநிலத்தில் இது போன்ற இயற்கை பேரிடர் நடந்தாலும், அதனை காப்பாற்ற வேண்டியது மாநில அரசுக்கு மட்டுமல்ல, இந்திய ஒன்றிய அரசுக்கும் அதில் பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.
சுனாமியையே நங்கள் தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்று சொல்வது பெருமைக்குரிய செய்தி அல்ல; சுனாமியை பேரிடராகத்தான் உலகமே கருதுகிறது. அதையே பேரிடராக அறிவிக்கவில்லை என்றால் இவர்கள் எந்த அளவுக்கு மக்கள் நலனில் அக்கறை செலுத்த கூடியவர்களாக உள்ளார்கள் என்பதை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கும்போது அதை பேரிடராகத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். இது போன்ற சூழலில் போதிய நிதியை ஒதுக்கீடு செய்வதுதான் ஒரு நல்ல அரசுக்கு உள்ள இலக்கணம். இவர்கள் ஆட்சியை நடத்த அருகதை அற்றவர்கள் என்பது இதில் தெரிகிறது.
வேங்கைவயல் சம்பவம் குறித்து பலமுறை முதல்வரோடு பேசி உள்ளோம். டி.என்.ஏ பரிசோதனை செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் சிலருக்கு பரிசோதனை செய்ய சம்மன் அனுப்பி உள்ளார்கள். விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.