திருவேற்காடு கருமாரியம்மன் கழுத்தில் இருந்த 8 பவுன் தாலி மாயம்.. கைவரிசை காட்டிய அர்ச்சகர் வசமாக சிக்கினார்!
திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலையில் இருந்த 8 சவரன் தாலியை அக்கோவிலின் அர்ச்சகர் சண்முகம் திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காடில் பிரசித்திபெற்ற ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் கருவறையில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்த 8 சவரன் மதிப்புள்ள தாலிச் சங்கலி அண்மையில் திடீரென மாயமானது. இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கோயில் பொறுப்பாளர் கனகசபரி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் கோயிலில் தின ஊதியத்தின் அடிப்படையில் அர்ச்சகராகப் பணியாற்றும் சண்முகம் என்பவர் அம்மன் தாலியை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து அர்ச்சகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.