இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. பிசிசிஐ மெகா சொதப்பல்.. சிக்கிய டெஸ்ட் அணி
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற அனுபவமே இல்லாத பேட்ஸ்மேன்களை கொண்ட டெஸ்ட் அணி தேர்வு செய்யப்பட்டதே இல்லை. அந்த அளவுக்கு மோசமாக சென்றுள்ளது இந்திய டெஸ்ட் அணி. பிசிசிஐ செய்த சில சொதப்பல்கள் தான் இந்த நிலைக்கு காரணம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முதலில் அறிவிக்கப்பட்ட அணியில் ஜெய்ஸ்வால் தவிர ரோஹித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் என சர்வதேச அனுபவம் கொண்ட பேட்ஸ்மேன்கள் இடம் பெற்று இருந்தனர். அதில் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயரின் ஃபார்ம் மட்டுமே கவலை அளிக்கும் வகையில் இருந்தது.
ஆனால், அதன் பின் விராட் கோலி டெஸ்ட் தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகினார். அதன் பின் நல்ல ஃபார்மில் இருந்த கே எல் ராகுல் காயம் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டிலிருந்து விலகினார். ஸ்ரேயாஸின் ஃபார்ம் மோசமாக இருப்பதால் அவரை கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கியது பிசிசிஐ.
இப்படி மூன்று சர்வதேச அனுபவம் கொண்ட பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் என இரண்டு அறிமுக வீரர்களுடன், தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் மட்டுமே ஆடிய ரஜத் படிதார் களமிறங்க இருக்கின்றனர்.
இந்திய வரலாற்றில் ஒரே நேரத்தில் மூன்று அனுபவமே இல்லாத பேட்ஸ்மேன்கள் ஒரே டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இதற்கு முன் பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என கலவையாக வீரர்கள் ஒரே டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகி இருகின்றனர். தற்போது முதன்முறையாக ஒரே நேரத்தில் மூன்று பேட்ஸ்மேன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது இந்திய அணி.
இது இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ-யின் தோல்வியாகவே பார்க்கப்பட வேண்டும். அந்த மூன்று அறிமுக வீரர்களின் திறமை மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. ஆனால், அவர்களை ஒவ்வொரு வீரராக இதற்கு முன்பு நடந்த தொடர்களில் கூட அறிமுகம் செய்து இருக்கலாம். அதே போல, இவர்களில் இருவருக்கு வாய்ப்பு அளித்து விட்டு, மற்றொரு இடத்திற்கு வாய்ப்புக்காக காத்திருக்கும் புஜாரா போன்ற அனுபவ வீரரை அணியில் தேர்வு செய்து இருக்கலாம். அதன் மூலம், அணியின் ஒட்டுமொத்த அனுபவம் என்பது சமநிலையில் இருந்திருக்கும்.
ஆனால், புஜாரா, ரஹானே போன்ற வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் ஆடிக் கொண்டு இருந்தாலும் அவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு இல்லை என்ற பிடிவாதமான மனநிலையில் உள்ளது பிசிசிஐ. அதே போல, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலேயே சொதப்பிய நிலையில், புஜாராவை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சேர்த்து இருக்க வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை.
அதே போல, சர்பராஸ் கான் கடந்த ஆறு வருடங்களாக உள்ளூர் டெஸ்ட் தொடரில் ரன் மழை பொழிந்து வந்தார். ரஜத் படிதார் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஞ்சி ட்ராபியில் அதிக ரன் குவித்து இருந்தார். அவர்களுக்கு இடை இடையே சில டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு அளித்து இருந்தால் இப்போது அவர்கள் 5 முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி ஓரளவு அனுபவம் பெற்று இருப்பார்கள். ஆனால், பிசிசிஐ அதை செய்ய தவறி விட்டது.
ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் போன்ற கடினமான தொடரில், தவறான நேரத்தில் அனுபவ வீரர்களை புறக்கணித்து, இளம் வீரர்களை தேர்வு செய்து இருக்கிறது பிசிசிஐ. அந்த இளம் வீரர்களுக்கும் இது பெரிய அழுத்தமாகவே இருக்கும். இந்த தவறான முடிவுகளில் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பங்கும் உள்ளது.