இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. சர்பராஸ் கான் மோசமான ரெக்கார்டு
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சர்பராஸ் கான், அரைசதம் அடித்து தன் அறிமுகத்தை சிறப்பான ஒன்றாக மாற்றினார். ஆனால், அவர் ரன் அவுட் ஆகி தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
இதுவரை தங்கள் அறிமுக டெஸ்ட் போட்டியில் 13 இந்திய வீரர்கள் ரன் அவுட் ஆகி உள்ளனர். அவர்களில் இரண்டு வீரர்கள் மட்டுமே 50 ரன்களை கடந்து ஆடிய போது ரன் அவுட் ஆகி இருக்கின்றனர். அதிலும் அறிமுகப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 50 ரன்கள் சேர்த்த பின் ரன் அவுட் ஆன ஒரே இந்திய வீரர் சர்பராஸ் கான் மட்டுமே.
65 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் இந்திய வீரர் அப்பாஸ் அலி பாய்க் தன் அறிமுகப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்கள் குவித்த நிலையில் ரன் அவுட் ஆகி இருந்தார். தற்போது சர்பராஸ் கான் தன் முதல் சர்வதேச டெஸ்ட் இன்னிங்ஸில் ரன் அவுட் ஆகி புதிய மோசமான ரன் அவுட் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். இவர்கள் இருவரைத் தவிர 11 வீரர்கள் 50 ரன்களை எட்டும் முன்பே தங்கள் அறிமுக டெஸ்ட்டில் ரன் அவுட் ஆகி இருக்கின்றனர்.
தங்கள் அறிமுக டெஸ்ட் போட்டியில் ரன் அவுட் ஆன இந்திய வீரர்கள். பட்டியல் –
கே.சி. இப்ராஹிம், ஜெயசிங்ராவ் கோர்படே, சந்து போர்டே, சுரேந்திரநாத், அப்பாஸ் அலி பெய்க், பார்த்தசாரதி சர்மா, கிரிஸ் ஸ்ரீகாந்த், அசோக் மல்ஹோத்ரா ராய், நவ்ஜோத் சிங் சித்து, ராமன் லம்பா, அனில் கும்ப்ளே, கருண் நாயர், சர்பராஸ் கான்
இதில் வேடிக்கையான ஒரு சம்பவமும் நடந்தது. சர்பராஸ் கானுக்கு டெஸ்ட் அறிமுகத்துக்கான தொப்பியை வழங்கியது அனில் கும்ப்ளே. அவரும் தன் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரன் அவுட் ஆகி இருந்தார். அவர் சர்பராஸ் கான் ரன் அவுட் குறித்து பேசுகையில் தனது துரதிர்ஷ்டத்தை சர்பராஸ் கானுக்கும் தான் அளித்து விட்டதாக வேடிக்கையாக குறிப்பிட்டார்.