இது திரைத்துறைக்கு நல்லதல்ல.. நயன்தாராவுக்கு ஆதரவு அளித்த வெற்றிமாறன்!!

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் ‘அன்னபூரணி’ இது நயன்தாராவுக்கு 75ஆவது படமாகவும் அமைந்தது. இந்தப் படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இருப்பினும் இத்திரைப்படம் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பை திரையரங்குகளில் பெறவில்லை. வசூலும் சுமாராகவே இருந்தது.

தொடர்ந்து அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸில் கடந்த டிசம்பர் 29-ம் தேதி வெளியானது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிகிஸில் இந்த படத்தை பார்க்கலாம். சமையல் குறித்து உருவான இந்த திரைப்படமானது ஓடிடி வெளியீட்டுக்கு பின் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் ஜெய் நயன்தாராவிடம் “ராமர் கூட அசைவ உணவு சாப்பிட்டுள்ளார்” என்று பேசுவது போல இருக்கும். மேலும் ஒரு அர்ச்சகரின் மகளான நயன்தாரா நமாஸ் செய்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த காட்சிகளைக் குறிப்பிட்டு இந்த மதத்தில் இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா பிரமுகர் ரமேஷ் சோலான்கி என்பவர் மும்பையில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்டுடியோஸ் வருத்தம் தெரிவித்து சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கவுள்ளதாகவும் அதுவரை படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்படும் எனவும் அறிவித்தது. சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை இப்படி மிரட்டி ஓடிடி தளத்தில் இருந்து நீக்குவது கண்டனத்துக்குரியது என குரல்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் “இந்தியாவில் சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என எதுவும் இல்லை. இது ஓடிடிகளுக்கும் பொருந்தும். தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை அழுத்தம் கொடுத்து ஓடிடியில் இருந்தே நீக்கவைப்பது திரைத்துறைக்கே நல்லதல்ல. ஒரு படத்தை அனுமதிப்பதற்கும் தடை செய்வதற்கும் சென்சார் போர்டுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகளே தணிக்கைக் குழுவின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *