மாட்டு பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..!
பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளாக கொண்டாடப்படுவது மாட்டுப் பொங்கல். விவசாயத்திற்கு அடிப்படை தேவையான மழைக்குரிய தெய்வமான இந்திரனை வழிபடுவது போகிப் பண்டிகையாகவும், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து விவசாயிகளின் உற்ற நண்பனாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்து, அவைகளை கெளரவிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மாட்டுப் பொங்கலாகும்.
பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளில் வீட்டில் மாடு வைத்திருப்பவர்கள் மாடுகளை குளிப்பாட்டு அதற்கு சந்தனம், குங்குமம் வைத்துல கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி அலங்கரித்து, அதற்கு பூ அல்லது மாலை அணிவித்து, பொங்கல் வைத்து படைத்து வழிபடுவார்கள். பசு மாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்களும் குடியிருப்பதால் பசு மாட்டிற்கு கற்பூரம் காட்டி, இந்த நாளில் வழிபடுவது மகாலட்சுமியை வீட்டிற்கு அழைப்பதற்கு ஒப்பாகும். கிராமங்களில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல் போட்டிகள் நடத்தப்படும்.
பொங்கல் அன்று வாசலில் மாவிலை தோரணங்கள், கரும்பு வைத்து கொண்டாடுவதைப் போல், மாட்டுப் பொங்கல் அன்று மாட்டுத் தொழுவத்தை கோலமிட்டு அலங்கரித்து, சாம்பிராணி காட்டி, மாடுகள் வசிக்கும் இடத்தில் பொங்கல் வைத்து, வாழை இலை பரப்பி மாடுகளுக்குச் சர்க்கரைப் பொங்கலைப் படைப்பார்கள். சர்க்கரை பொங்கல், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து படைத்து, மாடுகளுக்கு கற்பூரம் காட்டி வழிபடுவதுண்டு.