கேப்டன் இன்னிங்ஸ்னா இதுதான்.. ஆண்டர்சன் பந்தில் பறக்கவிட்ட ரோகித் சர்மா.. மிரண்டுபோன ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 4வது நாளில் இந்திய அணி வெற்றிபெற 152 ரன்கள் மட்டுமே எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. இதன்பின்னர் 4வது நாள் ஆட்டத்தை ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் கூட்டணி தொடங்கியது.

தொடக்கம் முதலே ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ரன்கள் சேர்ப்பதில் தீவிரமாக இருந்தனர். தேவையில்லாமல் டாட் பால்கள் விளையாடி இங்கிலாந்து அணிக்கு எந்த உற்சாகமும் கொடுக்க கூடாது என்பதில் ரோகித் சர்மா குறியாக இருந்தார். இதனால் ஆண்டர்சன் வீசிய 3வது ஓவரிலேயே ரோகித் சர்மா சிக்ஸ் அடித்து அட்டாக் செய்ய போவதை தெளிவாக உணர்த்தினார்.

இதையடுத்து சோயப் பஷீர் பவுலிங்கில் ஜெய்ஸ்வால் சில பவுண்டரிகளை விளாச, இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனிடையே சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ரோகித் சர்மா ஒருமுனையில் நின்று அதிரடியாக 69 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதற்கு ரசிகர்கள் பலரும் கரகோஷம் எழுப்பி பாராட்ட, பேட்டை கூட உயர்த்தாமல் அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாரானார்.

சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, திடீரென அட்டாக்கில் வந்த டாம் ஹார்ட்லியை அட்டாக் செய்ய நினைத்து, டவுன் தி டிராக் இறங்கி வந்தார். ஆனால் டாம் ஹார்ட்லி முன்பே கணித்து லெந்தை மாற்ற, அது ரோகித் சர்மாவை ஏமாற்றி பென் ஃபோக்ஸ் கைகளுக்கு சென்றது. பின்னர் பென் ஃபோக்ஸ் ஸ்டம்பிங் செய்ய, ரோகித் சர்மா 55 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தேவையான நேரத்தில் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பான இன்னிங்ஸை விளையாடியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *