26 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல மிட்டாய் வாங்கற மாதிரி ஆளுக்கு ஒன்னு வாங்கறாங்க
கார்களில் செடான், ஹேட்ச்பேக் என பல்வேறு வகைகள் இருந்தாலும், இந்தியர்கள் அதிகமாக விரும்புவது எஸ்யூவிக்களைதான்! ஏதேனும் ஒரு பிஸியான சாலையில் 5 நிமிடம் நின்று வேடிக்கை பார்த்தாலே இது உங்களுக்கு புரிந்து விடும். ஆம், எஸ்யூவி ரக கார்கள்தான் உங்கள் கண்களில் அதிகமாக தென்படும்.
சரி, கடந்த 2023ம் ஆண்டில் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையான எஸ்யூவி கார் (Most Sold SUV In 2023) எதுவென்று உங்களுக்கு தெரியுமா? மாருதி சுஸுகி பிரெஸ்ஸாதான் (Maruti Suzuki Brezza) இந்த பெருமைக்குரிய கார். ஆம், இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு அதிகமாக விற்பனையான எஸ்யூவி கார் என்ற பெருமையை பிரெஸ்ஸா தட்டி சென்றுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு இந்திய சந்தையில் ஒட்டு மொத்தமாக 1,70,588 பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு இந்திய சந்தையில் ஒட்டு மொத்தமாக வெறும் 1,30,563 பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
இதன் மூலம் விற்பனையில் 31 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருப்பதுடன், கடந்த 2023ம் ஆண்டு அதிகமான விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார் என்ற மகுடத்தையும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா தட்டி சென்றுள்ளது. இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், டாடா நெக்ஸான் (Tata Nexon) நூலிழையில் இந்த மகுடத்தை பறிகொடுத்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஒட்டு மொத்தமாக 1,70,311 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் கார்களுக்கு இடையேயான வித்தியாசம் வெறும் 277 யூனிட்கள் மட்டுமே! மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய இரண்டுமே சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப விலை 8.29 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 14.14 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் பெட்ரோல் (Petrol) இன்ஜினுடன், சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதன் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 25.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன.
இதில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, சுஸுகி கனெக்ட் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் மட்டுமல்லாது, கியா சொனெட் (Kia Sonet) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) போன்ற கார்களுக்கும், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா விற்பனையில் கடுமையான சவாலை வழங்கி வருகிறது.