புற்றுநோய் பாதிப்பை அறிவிக்க கேட் மிடில்டன் தயங்கியதன் காரணம் இது தான்… கசிந்த தகவல்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமது புற்றுநோய் பாதிப்பை வெளிப்படையாக அறிவிக்க தாமதப்படுத்தியதன் உண்மையான காரணம் தற்போது கசிந்துள்ளது.
உறுதியான தகவல்
பிரித்தானியாவின் எதிர்கால ராணியாரும் தற்போதைய வேல்ஸ் இளவரசியுமான கேட் மிடில்டன், தமக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கீமோ சிகிச்சை முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டு வெள்ளிக்கிழமை காணொளி ஒன்றை வெளியிட்டார்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே கேட் மிடில்டன் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், திடீரென்று வயிற்றில் அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டதும் பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளானது.
மட்டுமின்றி, அதன் பின்னர் கேட் மிடில்டனுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் அரண்மனை வட்டாரத்தில் இருந்து வெளியாகாத நிலையில், பிரபலங்கள் உட்பட பொதுமக்கள் பலர் கேலியும் கிண்டலும் செய்தனர்.
அத்துடன் அன்னையர் தினத்தில் கேட் மிடில்டன் வெளியிட்ட புகைப்படம் ஒன்றும் திருத்தப்பட்ட விவகாரத்தில் சிக்கி, சர்வதேச ஊடகங்களில் அரண்மனை தகவல்கள் நம்பகத்தன்மையை இழந்தது.
மேலும், கேட் மிடில்டன் இதற்கு முன்னர் ராணியார் தொடர்பில் வெளியிட்ட புகைப்படமும் திருத்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. இந்த களேபரங்களுக்கு நடுவிலேயே கேட் மிடில்டன் தமக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
புரிய வைப்பதே சவாலாக
ஆனால், ஏன் இவ்வளவு தாமதம் என்ற கேள்வி சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டது. தற்போது அதற்கான விடையும் கசிந்துள்ளது. தமது மூன்று பிள்ளைகளிடமும், தமது நோய் தொடர்பில் விளக்கி, அவர்களுக்கு புரியவைக்க கேட் மிடில்டன் தயாராவதற்கே தாமதமானதாக கூறப்படுகிறது.
தாம் நோயில் இருந்து மீண்டு வருவேன் என்று தமது மூன்று பிள்ளைகளுக்கும் நம்பிக்கை அளிக்க போதுமான கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, வயிற்றில் அறுவை சிக்கிச்சை முன்னெடுக்கப்பட்டதால், அதில் இருந்து மீண்டு வந்த பின்னரே, புற்றுநோய்க்கான சிகிச்சை முன்னெடுக்க முடியும் என்பதால், தாமதமானதாகவும் கேட் தமது காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.
தமது பிள்ளைகளுக்கு தாம் மீண்டு வருவேன் என்பதை புரிய வைப்பதே சவாலாக இருந்தது என கேட் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் முன்னர், தமது பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டும் என கேட் மிடில்டன் உறுதியுடன் இருந்துள்ளார் என்றே தகவல் கசிந்துள்ளது.
தற்போது கேட் மிடில்டன் தொடர்பில் கேலி பேசிய பல பிரபலங்களும் மன்னிப்புக் கோரும் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.