முதலிரவுல மணமக்கள் டென்ஷன் ஆகுறதுக்கு இதுவும் காரணம்… காமத்துக்கு மரியாதை | 139
அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை நம் தமிழ்ப் படங்களின் சில முதலிரவுக் காட்சிகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா..?
`பால் வண்ணம் பருவம் கண்டு’ என்று எம்.ஜி.ஆர், சரோஜாதேவியின் நாடியைப் பிடித்துக் கொஞ்சுவார்.
`பாலக்காட்டு பக்கத்துல ஒரு அப்பாவி ராஜா’ என பத்மினியைப் பார்த்துப் பம்முவார் சிவாஜி.
ரஜினி `விடிய விடிய’ மேன்லியாகச் சொல்லித் தருவார்.
கமல் `நிலாக்காயுது’ என்று நாயகிக்கு கண்கள் சொக்க அழைப்பு விடுப்பார்.
அப்புறம் மாதவனின் ஃப்ரெண்ட்லியான `காதல் சடுகுடு’ முதலிரவு சீன்.
அதற்கும் அப்புறம் `3′ படத்தில் ஸ்ருதிஹாசனை `த்தூ வா’ என்று மடியில் உட்கார வைத்து ரொமான்ஸ் செய்வார் தனுஷ்.
`சார்பட்டா பரம்பரை’யில் குத்து டான்ஸோடு ஆர்யா, துஷாராவின் முதலிரவு களைகட்டியது.
ஆக, இவற்றின் மூலம் நமக்குத் தெரிய வருவது முதலிரவிலேயே தாம்பத்திய உறவு நடந்துவிடும் என்பதுதான். `நிஜத்தில் எப்படி’ என்றோம், பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம்.
‘ஒரு திருமண வாழ்க்கை இதமா ஆரம்பிக்கணும்னா, முதலிரவுலேயே எல்லாம் நடந்திடணும்னு எதிர்பார்க்கக் கூடாது. பெரும்பாலும் அப்படி நடக்கவும் நடக்காது. அப்படியே எல்லாம் நடந்திடுச்சுன்னு நீங்க நம்பிட்டிருந்தாலும், உங்க லைஃப் பார்ட்னரும் அதையே நினைச்சாதான் அது உண்மையா இருக்க முடியும். அதனாலதான், காமசூத்திரம் `முதல் இரவிலேயே தாம்பத்திய உறவு வெச்சுக்க வேண்டாம்’னு அறிவுறுத்துது. திருமணமான முதல் மூணு நாள்கள் தம்பதியர் தனித்தனியாதான் படுக்கணும். அதன் பிறகு, ஏழு நாள்கள் வரைக்கும் ரெண்டு பேரும் நிறைய பேசணும். பிறகு, பக்கத்துல உட்கார்றது, ஒருத்தர் மேல ஒருத்தர் லேசா பட்டுக்கிறது, கைகளைத் தொடுறது, விரல்களைப் பிடிக்கிறது, தோள்பட்டை மேல மோவாயை வைக்கிறதுன்னு இருக்கணும். நம்ம கலாசாரத்துல ஆண்தான் மொதல்ல இயங்கணும்னு பதிய வைச்சிருக்கிறதால, இந்தச் செயல்களைச் செய்யுறதுல பெண்ணைவிட ஆணுக்குத்தான் பொறுப்பு அதிகம் இருக்கணும்.
அந்தக் காலத்துல பல நாள் கல்யாணம் வெச்சதோட முக்கியமான நோக்கமே, கல்யாணத்துக்கு முன்னாடி அண்ணலும் நோக்கி, அவளும் நோக்குறதுக்குத்தான். அப்புறம், கல்யாணத்துக்கு வந்த சொந்தக்காரங்க எல்லாம் பையன், பொண்ணை பத்தி நல்லபடியா பேசுறது பரஸ்பரம் காதுல விழுந்து லேசா காதல் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும். கல்யாணமும் நடக்கும். அதுக்குப்பிறகு நடக்கிற சம்பிரதாயங்கள் எல்லாமே பொண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தரையொருத்தர் தொடற மாதிரியே இருக்கும். இதன் மூலமா தாம்பத்திய உறவுக்கு அவங்களை மனரீதியா தயாராக்குவாங்க. அப்படியும் கல்யாணமான அன்னிக்கே முதலிரவு நடத்த மாட்டாங்க. அதுக்கும் நாள், கிழமைன்னு பார்த்துதான் நடத்துவாங்க. மணமக்கள் அந்த நாளை எண்ணி எண்ணி ஏங்கிட்டு இருக்க, கடைசியில எல்லாமே சுபம்.