சிவபெருமானின் நெற்றிக்கண்ணுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் இது தான்
சிவனின் நெற்றிக்கண் :
இந்து புராணங்களின் படி பிரம்மா, உயிர்களை படைப்பதற்கான கடவுளாகவும், விஷ்ணு- படைக்கப்பட்ட உயிர்களை காக்கும் கடவுளாகவும், சிவ பெருமான் – அந்த உயிர்களின் பாவங்களை அழித்து, மோட்சத்தை தரக் கூடிய கடவுளாகவும் கருதப்படுகிறார். சிவ பெருமானின் உருவத்தை குறிப்பிடும் போது புலித்தோல் ஆடை, கையில் திரிசூலம், உடுக்கை, கழுத்தில் ருத்ராட்சம், பாம்பு, உடல் முழுவதும் திருநீறு, நெற்றியில் மூன்றாவது கண் என்பது தான். நெற்றியில் இருக்கக் கூடிய மூன்றாவது கண் அல்லது நெற்றிக் கண் கோபத்தின் அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. சிவனுக்கு மூன்று கண்களை இருப்பதாக அனைத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மற்ற எந்த தெய்வத்திற்கும் நெற்றிக்கண் என்ற ஒரு அமைப்பு கிடையாது.
அதிகமான கோபம் வெளிப்படும் சமயத்தில் சிவனின் நெற்றிக்கண் திறக்கும் என கதைகளில் கேட்டிருக்கிறோம். சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்தால் எதிரில் இருப்பவை அனைத்தும் எரிந்து சாம்பலாகி விடும் என சிவ பெருமானை முழு முதற் கடவுளாகக் கொண்ட சைவர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். பெரும்பாலும் தீமைகளை அழிப்பதற்காக தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறப்பார் என்றும், இது அக்னி பிளம்பை வெளிப்படுத்தக் கூடியது என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். காம தேவனை எரித்தது, நக்கீரரை எரித்தது என சிவன் கோபப்படும் போது நெற்றிக்கண் திறக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ் கடவுளான முருகப் பெருமானும் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளில் இருந்து தோன்றியவர் என்றும் புராணங்கள் சொல்கின்றன.
நெற்றிக்கண் உணர்த்தும் தத்துவம் :
உண்மையில் சிவ பெருமானின் நெற்றிக்கண் என்பது ஞானத்தின் வெளிப்பாடாகும். மனிதர்களில் ஆறாவது அறிவு என குறிப்பிடுகிறோமே, அதைத் தான் சிவனுக்கு நெற்றிக்கண்ணாக சொல்லப்படுகிறது. சிவ பெருமான், உலகை பலமுறை அழிவில் இருந்து காப்பாற்றி உள்ளார். ஒருமுறை விளையாட்டாக பார்வதி தேவி, சிவ பெருமானின் கண்களை மூடியதால் உலகமே இருளில் மூழ்கியது. அப்போது உலகத்திற்கு ஒளி கொடுப்பதற்காக சிவபெருமான், தன்னுடைய உடலில் இருந்து அக்னியை வெளிப்படுத்த நெற்றிக்கண்ணை உருவாக்கினார். இந்த நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட அக்னியின் மூலம் உலகிற்கு ஒளி கொடுத்தார். சிவ பெருமானின் நெற்றிக்கண் என்பது அவசர காலத்தையும், தீமைகளின் அழிவு காலத்தையும் குறிப்பதாகும். சிவபெருமானின் ஒரு கண் சூரியன் என்றும், மற்றொரு கண் சந்திரன் என்றும் சொல்லப்படுகிறது.
அதே போல் ஞானிகளுக்கும் ரிஷிகளுக்கும் ஞானம் என்னும் ஒளியை வழங்கி, வழிகாட்டுவதற்காகவே சிவ பெருமான் நெற்றிக்கண்ணை கொண்டுள்ளார். மனிதர்களுக்கு இதே போல் மூன்றாவது கண் உள்ளது. இது நெருக்கடியான காலத்தில் பயன்படுத்த வேண்டிய ஞானத்தையும், அறிவையும் குறிப்பதாகும். சிவபெருமான் ஒரு யோகியாக இருந்து கடும் தவத்தால் ஞான ஒளியை பெற்றதாக சொல்லப்படுகிறது. யோகத்தின் தொடக்கமாகவும், முடிவாகவும் அமைவது சிவனே என்பதால் இவரை ஆதியோகி என்றும் அழைக்கிறோம்.
நெற்றிக்கண் என்பத ஞானம் மற்றும் நீதி நிலை நிறுத்துவதற்கானதாகும். மேலும் இது முக்காலத்தையும் உணரும் யோக நிலையை காட்டக் கூடியதாகும். இதனாலேயே சிவனை வணங்கும் யோகிகளுக்கும் முக்காலத்தையும் உணர்ந்து வழிகாட்டும் ஆற்றல் இருந்தது. ஒழுக்கநெறியுடன் ஒருவர் எப்போதும் விழிப்புடனும்ல ஞானத்துடனும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே நெற்றியில் மூன்றாவது கண் சிவபெருமான் கொண்டிருக்கிறார்.