கம்மியான விலையில் புது ஹூண்டாய் க்ரெட்டா கார் இப்படித்தான் இருக்கும்!! காரின் விலையை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க!
2024 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Creta Facelift) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய க்ரெட்டா காரின் விலை குறைவான இ வேரியண்ட் எவ்வாறு இருக்கும் என்பதை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
புதிய கார் வாங்கும்போது இந்தியர்கள் பெரும்பாலும் காரின் மைலேஜை தான் உன்னிப்பாக பார்க்கிறார்கள். இதனாலேயே, விலை குறைவான கார்களின் மீது மாருதி சுஸுகி, ஹூண்டாய் என முன்னணி கார் நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. இந்த வகையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள கார் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஆகும்.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17 இலட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டாலும், ரூ.10.99 இலட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் 2024 க்ரெட்டா காரை வாங்க முடியும். ரூ.10.99 இலட்சம் கூட ஒரு சிலருக்கு அதிகமானதாக தோன்றலாம். அத்தகையவர்களுக்காகவே, ரூ.10.99 இலட்சத்தில் கிடைக்கக்கூடிய எண்ட்ரீ-லெவல் க்ரெட்டா இ வேரியண்ட் காரை விவரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், காரில் நம்பர் பிளேட் எதுவும் பொருத்தப்பட்டு இல்லாததை காணலாம். இதில் இருந்து, இந்த க்ரெட்டா கார் ஷோரூமிற்கு கொண்டுச் செல்லும் வழியில் இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதை அறிய முடிகிறது. மேலும், விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும் இந்த க்ரெட்டா காரில் ஏகப்பட்ட மாடர்ன் வசதிகள் வழங்கப்பட்டு இருப்பதையும் வீடியோவில் காணலாம்.
காருக்கு வழங்கப்பட்டு இருக்கும் சாவியை காட்டுவதில் இருந்து இந்த வீடியோ ஆரம்பிக்கிறது. காருக்கான ஃப்ளிப் கீ -இல் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. இதன்பின், காரின் முன்பக்கம் காட்டப்படுகிறது. புதிய L-வடிவிலான எல்இடி டிஆர்எல்-கள் இந்த க்ரெட்டா இ வேரியண்ட்டில் இருப்பதை காணலாம். ஆனால், எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ஹெட்லைட்களை இணைக்கும் லைட் பார் வழங்கப்படவில்லை.
எல்இடி ஹெட்லைட்களுக்கு பதிலாக, புரோஜெக்டர் ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதேபோல், முன்பக்க க்ரில் பகுதியில் க்ரோம் ஹைலைட்களுக்கு பதிலாக க்ரே நிறத்திலான ஹைலைட்கள் உள்ளன. இந்த எண்ட்ரீ-லெவல் க்ரெட்டா காரில் சில்வர் நிறத்தில், அளவில் பெரிய ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த காரில் புதிய டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் இல்லை.
முந்தைய ஜென்ரேஷன் க்ரெட்டா கார் எந்த டிசைனில் சக்கர கவர்களை கொண்டிருந்ததோ அதே கவர் உடன் 16 இன்ச்சில் அலாய் சக்கரங்களை இந்த கார் கொண்டுள்ளது. இருப்பினும், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இந்த காரின் மேற்கூரையில் கம்பிகள் அல்லது க்ரோம் கார்னிஷ் எதுவும் வழங்கப்படவில்லை. மேற்கூரையில், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னாவிற்கு பதிலாக, சிறிய கருப்பு நிறத்திலான ஆண்டென்னா கொடுக்கப்பட்டுள்ளது.
காரின் முன்பக்கத்தில் ஹெட்லைட்களை இணைக்கும் லைட் பார் வழங்கப்படாவிடினும், பின்பக்கத்தில் டெயில்லைட்களை இணைக்கும் லைட் பார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பின்பக்க கண்ணாடிக்கான வைபர் & வாஷர் மற்றும் டீஃபாக்கர் உள்ளிட்டவை எதுவும் இல்லை. வீடியோவில், காரின் உட்பக்கத்தையும் காட்சிப்படுத்தி உள்ளனர். காரின் உள்ளே நிறைய மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் இல்லாததை காண முடிகிறது.