இதனால் தான் விராட் கோலி இந்திய அணியை விட்டு விலகினார்.. உண்மையை போட்டு உடைத்த ஏபி டிவில்லியர்ஸ்
இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். அவர் ஏன் விலகினால் என யாரும் ஊகங்களை வெளியிட வேண்டாம் என விராட் கோலி சார்பாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
எனினும், விராட் கோலி ரசிகர்கள் பலரும் அனுஷ்கா சர்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அவரது தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறி வந்தனர். ஆனால், விராட் கோலியின் சகோதரர், தங்கள் தாய்க்கு எந்த பிரச்சனையும் இல்லை. யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கூறி இருந்தார்.
இந்த நிலையில், விராட் கோலியின் நண்பரான முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஏன் அவர் விலகி இருக்கிறார் என்ற காரணத்தை போட்டு உடைத்து இருக்கிறார். அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் அவருடன் நேரம் செலவிட வேண்டி விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் விலகி இருப்பதாகவும், கோலி தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். மற்றபடி அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என டிவில்லியர்ஸ் கூறி இருக்கிறார்.
அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக 2023 உலகக்கோப்பை தொடரின் போதே பல்வேறு செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், யாரும் அதை உறுதி செய்யவில்லை. ஏபி டிவில்லியர்ஸ் முதல் நபராக அந்த தகவலை உறுதி செய்து இருக்கிறார். ஆனால், டிவில்லியர்ஸ் செய்தது சரியா? என பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விராட் கோலி தான் இந்திய அணியை விட்டு விலகி இருப்பது குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட பின்னரும் அதற்கான காரணத்தை ஏபி டிவில்லியர்ஸ் பொதுவெளியில் பேசியது சரியா? என கோலி ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதே சமயம், தன் தாயார் குறித்தே தவறான செய்திகள் பரவி வருவதால் கோலியே கூட இந்த தகவலை அறிவிக்குமாறு டிவில்லியர்ஸ்-இடம் கேட்டுக் கொண்டு இருக்கலாம் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.