இந்த புது டாடா எலக்ட்ரிக் காரை அடிக்கடி சார்ஜ் பண்ண அவசியமே இருக்காது!! 500கிமீ-க்கு நிற்காமல் செல்லும்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் புதிய எலக்ட்ரிக் காராக வெளிவர உள்ள ஹெரியர் இவி (Harrier EV) பற்றிய புதிய விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றின்படி, எந்த மாதிரியான எலக்ட்ரிக் காராக ஹெரியர் இவி காரை பெறலாம் என்பதை பற்றியும், இந்த காரின் அறிமுகத்தை பற்றியும் இனி விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் மிக பெரிய எலக்ட்ரிக் கார் நிறுவனமாக டாடா மோட்டார்ஸை சொல்லலாம். ஏனெனில், தற்போதைக்கு அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் கார் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. சமீபத்தில் கூட, பஞ்ச் இவி என்ற எலக்ட்ரிக் கார் டாடா மோட்டார்ஸில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
இத்துடன், டாடா மோட்டார்ஸ் நிற்க போவதில்லை. இந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் இன்னும் சில எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் வாகனங்கள் பிரிவு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு, இந்த 2024இல் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் டாடா எலக்ட்ரிக் கார்களுள் ஒன்று ஹெரியர் இவி ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஹெரியர் இவி கான்செப்ட்டை கடந்த 2023இல் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது, டாடா ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் தொடர்பான புதிய படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. காரின் உட்பக்கத்தில் வழங்கப்படும் திரையின் ஒரு ஸ்க்ரீன்-ஷாட் படமாக இந்த படம் விளங்குகிறது.
இணையத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தின் மூலமாக சில விஷயங்கள் நமக்கு தெரியவந்துள்ளன. அவற்றுள் முக்கியமாக, டாடா ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் பேட்டரி பேக்கை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக சுமார் 500கிமீ தொலைவிற்கு இயங்கும் என்கிற விஷயம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான படத்தில், 80% சார்ஜில் 400கிமீ தொலைவிற்கு இந்த காரில் பயணிக்கலாம் என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது.
அப்படியென்றால், மீதி 20% சார்ஜ் நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக 500கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும் என நாங்கள் தான் ஒரு யூகமாக தெரிவிக்கிறோம். அத்துடன், ஸ்லோ சார்ஜிங் (AC) மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் (DC) என இரு விதமான சார்ஜிங் ஆப்ஷன்கள் ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட உள்ளதையும் தற்போது வெளியாகி உள்ள படத்தின் மூலம் அறிய முடிகிறது.
தங்களது புதிய எலக்ட்ரிக் கார்கள் சிங்கிள் சார்ஜில் 500கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியவைகளாக இருக்கும் என கடந்த ஆண்டே டாடா மோட்டார்ஸின் நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் சந்த்ரா தெரிவித்து இருந்தார் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது. அதாவது, இதுவரையில் தங்களது எலக்ட்ரிக் கார்கள் ஜென்ரேஷன் 1 பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஜென்ரேஷன் 2 பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படும் தங்களது புதிய எலக்ட்ரிக் கார்கள் 500கிமீ ரேஞ்சை கொண்டவைகளாக இருக்கும் என ஷைலேஷ் சந்த்ரா தெரிவித்து இருந்தார்.
அவர் சொன்னப்படி, ஆக்டி.இவி என்ற டாடாவின் புதிய பிளாட்ஃபாரத்தில் ஹெரியர் இவி வடிவமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதே பிளாட்ஃபாரத்தில்தான், பஞ்ச் இவி எலக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டு உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 500கிமீ ரேஞ்ச் என்பது மட்டுமின்றி, வேறு சில சிறப்பம்சங்களையும் கொண்டதாக ஹெரியர் இவி உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது, வைகல்-டு-லோடு மற்றும் வைகல்-டு-வைகல் சார்ஜிங் திறன்களை கொண்டதாக ஹெரியர் இவி இருக்கும் என கூறப்படுகிறது.