குடும்ப அட்டை குறித்து வெளியான இந்த செய்தி முற்றிலும் பொய்…! யாரும் நம்ப வேண்டாம்..!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிப்.6 மற்றும் பிப்.7 அன்று சில நாளேடுகளில், நியாய விலைக் கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சுயவிவரங்களை ஒரு வெள்ளைத்தாளில் அளிப்பதுடன் விரல் ரேகை சரிபார்ப்பை இம்மாத (பிப்ரவரி) இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறு மேற்கொள்ளாதவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்றும், இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி, பொதுவிநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கெனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறின்றி இப்பணியினைச் செய்திட அறிவுறுத்தப்பட்டு அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ அல்லது பொருள்கள் வாங்க கடைக்கு வரும்போதோ கைவிரல் ரேகைப் பதிவு மூலம் புதுப்பிக்கக் கூறப்பட்டு அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இயலவில்லையெனில், இதற்கென தனி முகாம்கள் நடத்தவும், தேவைப்படின் வீட்டிற்கே சென்று புதுப்பித்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சில நாளிதழ்களில் குறிப்பிட்டிருப்பதுபோல் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும், கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்களும் நீக்கப்படாது என்றும், வெள்ளைத்தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்லை என்பதால், இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *