இந்த ஒரு பொடி இருந்தால் போதும்… 5 நிமிடத்தில் சுவையான ‘மோர் குழம்பு’ செய்துவிடலாம்.!

காய்கள் ஏதும் சேர்க்காமல் மிகவும் சுலபமான முறையில் செய்யப்படும் ‘மோர் குழம்பு’ வெயில்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த மோர் குழம்பை மேலும் எளிமையான முறையில் ஒரே ஒரு பொடியை வைத்து நிமிடத்தில் செய்துவிடலாம் என்றால் நீங்கள் நம்புவீர்களா.?

அட ஆமாங்க இந்த ஒரு பொடி இருந்தால் போதும் 5 நிமிடங்களில் மோர் குழம்பு செய்துவிடலாம். அதுவும் இந்த பொடியானது 2 வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். மேலும் அவசரமாக வேலைக்கு செல்பவர்கள் இந்த பொடியை பயன்படுத்தி ஈசியாக நிமிடத்தில் மோர் குழம்பு செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

பொட்டுக்கடலை – 1 ஸ்பூன்

துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் – 5

கொத்தமல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை

மிளகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

வெந்தயம் – 1 ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கொத்தமல்லி விதைகள், வர மிளகாய், மிளகு, வெந்தயம், சீரகம், கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

தற்போது வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் தட்டில் கொட்டி ஆறவைத்து கொள்ளவும்.

அனைத்தும் நன்றாக ஆறியவுடன் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

அரைத்து வைத்துள்ள இந்த பொடியை எடுத்து நன்றாக ஆறவிட்டு அதை ஒரு காய்ந்த பாட்டில் அல்லது டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த பொடியை ஃபிரிட்ஜில் வைத்தால் 2 வாரங்கள் வரை கெடாமல் வைத்துக்கொள்ளலாம். ஆனால் வெளியே வைத்தால் ஒரு வாரம் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.

உங்கள் வீட்டில் மோர் குழம்பு செய்கிறீர்கள் என்றால் தயிருடன், தேவையான அளவு உப்பு மற்றும் 2 ஸ்பூன் இந்த மோர்குழம்பு பொடியை சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அடித்து எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வர மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் அடித்து வைத்துள்ள மோர் கலவையை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான மோர் குழம்பு ரெடி.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *