“இந்த பதவிக் காலத்தை”.. சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல்.. விராட் கோலி நெகிழ்ச்சி பதிவு
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பதவி ஏற்றார். தோனி கேப்டன் பதவியை விட்டு விலகிய நிலையில் இந்திய கிரிக்கெட்டின் மற்றொரு ஜாம்பவானான விராட் கோலி, தோனி குறித்து மனம் திறந்து தன் கருத்தை கூறி இருக்கிறார்.
2008 முதல் 2023 வரை இடையே இரண்டு ஆண்டு தடையை தவிர்த்து 14 ஆண்டுகள் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்துள்ளார் தோனி. 2022ஆம் ஆண்டே கேப்டன் பதவியை விட்டு விலகிய அவர் ஜடேஜாவை கேப்டனாக ஆக்கினார். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. சிஎஸ்கே அணி அந்த ஆண்டு லீக் சுற்றில் படுதோல்வி அடைந்ததால் ஜடேஜா கேப்டன் பதவியை மீண்டும் தோனி வசமே அளித்தார்.
அதன் பின் 2023 ஆம் ஆண்டு தோனி தலைமையில் களம் கண்ட சிஎஸ்கே அணி கோப்பை வென்றது. அதன் பின் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாட முடிவு செய்தார் தோனி. தற்போது 42 வயதாகி விட்ட நிலையில் அவரால் அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியுமா? என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில் தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவி ருதுராஜ் கெய்க்வாட் வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
சிஎஸ்கே அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டனாக தோனி பதவி விலகி இருக்கும் நிலையில், விராட் கோலி அது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் “புகழ்பெற்ற இந்த கேப்டன்சி பதவிக் காலம் இது. இந்த சகாப்தத்தை ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள்” என குறிப்பிட்டு இருக்கிறார்.
தோனியின் சிஎஸ்கே கேப்டன் பதவி குறித்து விராட் கோலி வெளியிட்ட பதிவு, “மஞ்சள் நிறத்தில் புகழ்பெற்ற கேப்டன்சி பதவிக் காலம். இந்த சகாப்தத்தை ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். உங்கள் மீது எப்போதும் மரியாதை உள்ளது” எனக் கூறி இருக்கிறார்.