Thoothukudi Floods: ‘விரைவில் தாமிரபரணியில் தடுப்பணையா?’ அமைச்சர் எ.வ.வேலு பதில்!

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளுக்குச் சென்று, 8வது நாளாக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சாலைகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரலாறு காணாத பெய்த மழையினால், நாகர்கோவில்-5, விருதுநகர்-13, தென்காசி-13, தூத்துக்குடி-113 மற்றும் திருநெல்வேலியில்-44 சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டு விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் திருச்செந்தூரையும், பாளையங்கோட்டையும் இணைக்கின்ற தரைப்பாலம் உடைந்து விட்ட காரணத்தினால், தற்காலிகமாக 40 மீட்டர் நீளத்திற்கு கான்கீரிட் சாலை போடப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் உள்ள தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்த வேண்டும் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின்படி, தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 1127 தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்டப் பாலங்களாக கட்டப்பட்டு வருகிறோம். இதில், இந்த தரைப்பாலமும் அடங்கும். இந்த தரைப்பாலத்தை, உயர்மட்டப்பாலமாக கட்ட ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

தாமிரபரணி ஆற்றில் செக்டேம் கட்டுவது என்பது இருவேறு கருத்துகள் உள்ளது. ஆனால், தாமிரபரணி ஆற்றின் கரையை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

நான்கு மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை நிரந்தரமாக சீரமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்து, மூன்று தினங்களுக்குள் தெரிவிக்குமாறு, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் அவர்களிடம் தெரிவித்துள்ளேன். மாஞ்சோலை மலை கிராமத்திற்கு சாலை அமைக்க, வனத்துறையிடம் ஒப்புதல் பெற்றவுடன், சாலை அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *