தத்தளிக்கும் தூத்துக்குடி… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை … கலெக்டர் அவசர உத்தரவு… !
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ” பொதுமக்கள் உப்பாத்து ஓடை கரையோரம் வசிப்பவர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம். கரையோரத்தில் நின்று குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம். தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து நேற்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த மழை மேலும் 4 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்து வீசும் வெப்பக்காற்றும், குளிர்க் காற்றும் இணைகிறது.
இதனால் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று அதிகாலை முதல் விழுப்புரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் திருவண்ணாமலை, ராணிப் பேட்டை , கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களிலும் மிதமான மழைபெய்தது. வட மாவட்டங்களிலும் மழை நேற்று இரவும் நீடித்தது. மேலும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பகுதிகளில் நேற்று இரவும் கனமழை பெய்தது.
இந்நிலையில், வட தமிழக கடலோரப் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தெ ன் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.