Thoothukudi: தூத்துக்குடியில் நாளை முதல் ரூட்டு கிளர்! ஹேப்பி செய்தி சொன்ன எ.வ.வேலு!

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில், சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசிய அவர், சிறப்பு மருத்துவ முகாம் மூலம் இன்று மதியம் 12.00 மணிவரை, 7,175 நபர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது என்றும், கருங்குளம், ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம் ஆகிய ஒன்றியங்களில், 87 ஊராட்சிகளில் இருக்கின்ற பாதிப்புகளை, ஊராட்சி பணியாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

ஏரல் பகுதியில், குருப்பல் என்னும் இடத்தில் உள்ள பாலத்திற்குப் பதிலாக, தற்காலிக சாலை, இரண்டு நாட்களில் முழுவீச்சில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தாமிரபரணி ஆற்றில் 112 இடங்களில், கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மழைநீர் வெள்ளதால், மின் மோட்டர் பம்புகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தற்போது, ஊராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக, லாரிகளில் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

மின்சாரப் பணிகளில், வீட்டு மின்சார இணைப்புகள், வியாபாரத்திற்கு வழங்கப்படும் மின்சார இணைப்புகள் மற்றும் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சார இணைப்புகள் உள்ளது. இதில், வீட்டு மின்சார இணைப்பும், வியாபாரத்திற்கு வழங்கப்படும் மின்சார இணைப்புகளும் 95% சதவீதப் பணிகள் நிறைவடைந்து விட்டது. மீதமுள்ள 5% சதவீதப் பணிகள் இன்று மாலையோ அல்லது நாளையோ முடிவடையும் என்றும், இப்பணிகள் முடிவடைந்தவுடன், விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சார இணைப்புப் பணிகள், மின்சார வாரிய பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

தாமிரபரணி ஆற்றின் இரண்டு பக்கமுள்ள கரைகளை உயர்த்தி கட்டுவதற்கு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடத்தில் எடுத்துரைப்பதாக தெரிவித்தார்கள். மேலகடம்பாகுளம் என்னும் குளத்தில் இருந்து, அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் இங்கிருந்தான் வழங்கப்பட்டு வருகிறது. இக்குளத்தை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள, மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் னிமொழி அவர்களிடத்தில் எடுத்துரைப்பதாக எ.வ.வேலு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கனமழையினால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில், அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் தூத்துக்குடி. மழை மற்றும் பேரிடர் காலங்களில் முதலில் பழுதடைவது சாலைகள்தான், அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் 44 இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 113 இடங்களிலும், தென்காசி மாவட்டத்தில் 13 இடங்களிலும், விருதுநகர் மாவட்டத்தில் 13 இடங்களிலும், நாகர்கோவிலில் 5 இடங்களிலும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டிருந்தது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், சாலை சீரமைப்புப் பணிகளை விரைவாகப் மேற்கொண்டதில், இன்று(24.12.2023) நாகர்கோயிலில் 5 இடங்களிலும், விருதுநகர் மாவட்டத்தில் 13 இடங்களிலும், தென்காசி மாவட்டத்தில் 13 இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 42 இடங்களிலும் சாலை சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டது. மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் மீதமுள்ள 2 இடங்களில் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணி இன்று(24.12.2023) மாலைக்குள் நிறைவடைந்து, பேருந்து போக்குவரத்து தொடங்கிவிடும்.

கிராமப் பகுதிகளுக்கு சாலைகள் அமைக்கப்படும், கிராமச் சாலைகள் அலகின் மூலம், 4 தரைப்பாலங்களை, உயர்மட்டப் பாலங்களாக கோபாலபுரம், பொட்டல்ஊரணி, ஏரல், உமரிக்கோட்டம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டது. உயர்மட்டப் பாலம் கட்டும்பொழுது, மாற்றுச் சாலைகள் அமைக்கப்படுவது வழக்கம், அந்த மாற்றுச் சாலைகளும் மழைநீர்வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. அந்த நான்குச் சாலைகளில், 3 சாலைகள் செப்பனிடப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள ஒரு சாலையில் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணி முடிந்தவுடன் போக்குவரத்து தொடங்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தின் 113 சாலைகளில், 104 சாலைகள் சீரமைக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள 9 சாலை சீரமைப்புப் பணிகள் இன்று(24.12.2023) மாலைக்குள் நிறைவடைந்து விடும் என்றும், நாளை முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *