பித்ரு தோஷம் தாக்கிவிடுமோ என்று மனவருத்தம் கொள்பவர்கள் இனி கவலைக் கொள்ள வேண்டியதில்லை..!

பெற்றோர்களை விபத்தில் பறிகொடுத்து விட்டேன். பித்ருக்களுக்குரிய சிரார்த்தக் காரியங்களை செய்வதற்கு உடன்பிறந்த ஆண்பிள்ளைகள் இல்லை. பித்ரு தோஷம் தாக்கிவிடுமோ என்று மனவருத்தம் கொள்பவர்கள் இனி கவலைக் கொள்ள வேண்டியதில்லை. மேலும் தொலைதூரத்தில் காசி, கயாவிலும் இராமேஸ்வரத்திலும் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதிக செலவு ஆகுமே என்று கவலைக்கொள்பவர்களுக்கும் உதவுவதற்காகவே சிரார்த்த சம்ரட்சண பெருமாள் இருக்கிறார்.

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் சாலையில் அமைந்துள்ளது நென்மேலி கிராமம். இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீ லஷ்மி நாராயணப் பெருமாள் சன்னிதியில் உள்ள உற்சவமூர்த்தி சிரார்த்த சம்ரட்சண பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். இந்தக் கிராமத்துக்கு புண்டரீக நல்லூர் அதாவது பிண்டம் வைத்த நல்லூர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் உள்ள திருக்குளம் புஷ்கரணி, காசிக்கு நிகரான கோவில் என்று முன்னோர்களால் போற்றப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் ஆதரவற்றவர்கள், அகால மரணமடைந்தவர்கள், திதி தெரியாதவர்கள், திதியை மறந்தவர்கள் அனைவரும் இந்த பெருமாளை அண்டினால் பித்ருக்களின் ஆசி தடையில்லாமல் கிடைக்கும். உங்கள் பித்ருக்களுக்கு உங்கள் சார்பில் பெருமாளே நின்று திதி கொடுப்பதால் பித்ருலோகத்தில் இருக்கும் பித்ருக்களுக்கு குறையாமல் செல்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒவ்வொரு வருடமும் இறந்தவர்களின் திதியை கவனத்தில் கொண்டு அன்றைய தினம் கொடுக்கும் சிரார்த்தம், தர்ப்பணம் மட்டும்தான் அவர்களை சென்றடைகிறது. ஆனால் இறந்த தேதியும் திதியும் தெரியாமல் இருக்கும் நாம் எந்த நாளில் திதி கொடுப்பது என்று திணறுபவர்கள் கூட தடங்கலின்றி தங்கள் பித்ருக்களுக்கு உரிய கடன்களை இந்தக் கோவிலில் செய்யலாம் என்பது மேலும் விசேஷம். பித்ரு தோஷம், பித்ருக்களின் சாபம் தீரவும் பரிகாரத்தலமாக இவை இருக்கிறது.

திதியன்று மட்டுமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இங்குள்ள லஷ்மி பெருமாள் சிரார்த்தன சம்ரட்சண பெருமாளாக மாறி அருள்பாலிக்கும் போது நீங்கள் சிரார்த்தம் செய்து பித்ருக்களை மகிழ்ச்சிபடுத்தலாம். திதி கொடுக்க விரும்புபவர்கள் காலை 11 மணிக்குள் இந்தக் கோவிலுக்குள் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்களின் கிரியைகளை ஏற்கும் பெருமாள் உங்கள் கோரிக்கைகளை ஏற்று விரதமிருந்து பக்தர்களுக்காக அவர்கள் சார்பில் தானே நின்று திதி கொடுக்கிறார்.

பக்தர்கள் மஞ்சள், எள் (ப.பருப்பு), தர்ப்பப்பை, விரலில் அணிய பவித்ரம், பழம், வெற்றிலை போன்றவற்றை பெருமாளிடம் சமர்பித்து தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து, பிறகு கோவிலின் பின்பக்கமுள்ள விஷ்ணு பாதத்தில் திருமாலின் திருவடிக்கு அருகில் சாஸ்த்ரிகள் வழி காட்ட தங்கள் பித்ருக்களை மீண்டும் வேண்டியபடி பெருமாளிடம் சமர்பித்து சிரார்த்த சமரட்சணம் செய்ய வேண்டும்.

பிறகு பெருமாளுக்கு பூஜையும், மகா சங்கல்பமும் நடத்தி வழிபடவேண்டும். திவசமன்று பித்ருக்களுக்கு படைக்கும் உணவுகளை நைவேத்தியம் செய்து பிரசாதமாக விநியோகிக்க வேண்டும். முக்கியமாக வெண்பொங்கலும், பிரண்டை எள் கலந்த துவையலும், தயிர்சாதமும் முக்கிய பிரசாதமாக படைக்கப்படுகிறது. தாகத்தினாலும் பசியினாலும் வாடும் பித்ருக்களின் சாபத்துக்கு பரிகாரம் என்பதே இல்லை. ஆனால் பித்ருக்களின் சாபத்தை நீக்கி நம் சந்ததியினருக்கு நன்மை செய்ய சிரார்த்த சம்ரட்சண பெருமாளை அணுகுங்கள். பித்ரு சாபமின்றி மகிழ்ச்சியோடு வாழுங்கள்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *