இன்று நதிகளில் நீராட முடியாதவர்கள் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று…

மாசி மகம் என்பது மாதத்தின் பெளர்ணமியுடன் கூடி வரும், மக நட்சத்திர நாள். இன்றைய மாசி மகத்தின் மற்றொமொரு சிறப்பு, மாசி மகம், மாசி பெளர்ணமி இணைந்து வருவது. இன்று தீர்த்தங்களுடன் அமைந்த கோயில்களில் தெப்பத்திருவிழா வெகு விமரிசை யாக நடக்கும்.

மக நட்சத்திரம் சிம்மராசிக்குரியது. சந்திரன், சிம்மராசியில் சஞ்சரிப்பார். மகம் என்பது, கேதுவின் நட்சத்திரம்.

மாசிமகம் அன்று, காலபுருஷ ஐந்தாம் இடத்தின் அதிபதியான சூரியனின் வீட்டில், சந்திரன் இருக்கிறார். இந்த ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. சூரியன் என்பது ஆன்மாவாகவும், சந்திரன் என்பது உடலாகவும் கருதப்படுகிறது.

சூரியன், தன் வீட்டை தானே பார்ப்பதால், மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது சூரியன், சந்திரன், கேது மூவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இன்றைய தினத்தில், ஆன்மாவையும், உடலையும் சுத்தம் செய்தால், நமது பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும் என்பது ஐதிகம்.

இந்நாளே, மாசிமகம் என்று இந்துக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும், குரு சிம்மத்துக்கு வரும் போது (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோயிலில் மிகச் சிறப்பாக மாசி மகம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், உலகின் பல இடங்களில் வசிக்கும் மக்கள், இங்கு ஒன்று கூடி நீராடுவார்கள்.

மக நட்சத்திரத்தை, பித்ருதேவ நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள். நமது முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியைத் தருவது இந்த பித்ருதேவ நட்சத்திரம் தான்.

இறைவன், உலகை உருவாக்குவதற்கு முன்பு பித்ருதேவனை படைத்த பிறகே தேவர்களையும், மனிதர்களையும் சக ஜீவராசிகளையும் படைத்ததாக சாஸ்திரம் கூறுகிறது.

நமது முன்னோர்களுக்கு உரிய சிரார்த்தங்களைச் செய்யும் போது, பித்ருதேவனின் ஆசியும் நமக்கு கிடைக்கிறது. இன்றைய தினம், புனித நதிகளில் நீராடுவதை பிதுர் மகா ஸ்நானம் என்று சொல்கிறார்கள்.

இந்நாளில், முன் ஜென்ம வினைகள் நீங்கி, இப்பிறவியில் படும் துயரங்களைப் போக்கவும், இறைவனது அருளைப் பெறவும் வழிபடலாம்.

புண்ணிய நதிகளில் நீராடியோ, அதைத் தரிசித்தோ, அதைப் பருகியோ தங்கள் பாவங்களைப் போக்கி கொள்ளலாம். இன்றைய தினம், நமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தால், நமது முன்னோர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர்.

நதிகளில் நீராட முடியாதவர்கள் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று, அம்பிகையையும், சிவாலயங்களிலுள்ள அம்மையப்பனையும் வழிபடுங் கள். குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் முருகப்பெருமானை வேண்டி விரத மிருந்து வழிபட்டால், குழந்தைபேறு உண்டாகும்.

குழந்தைகள் நறுமணமிக்க மலர்களால், ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபட்டால், கல்வியில் மேன்மை பெறுவார்கள். காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றுங்கள். வாசலிலும் விளக்கேற்றி வையுங்கள்.

மாசிமகமான இன்று, முதியோர்களுக்கு அன்னதானமும், ஆடைகளையும் இயன்ற அளவு தானம் செய்யுங்கள். வீட்டில் வறுமை பீடித்திருந்தால் தொலைந்து ஐஸ்வர்யம் பெருகும்.

மாசி மக வழிபாடு உங்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *