திருச்செந்தூர்-தூத்துக்குடி ஓகே! ஆனா.. நெல்லைக்கு எப்போது? வந்து விழுந்த கேள்வி! எ.வ.வேலு பரபர பதில்
தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இணைப்பு சாலைகள் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் திருச்செந்தூர்-நெல்லை சாலை எப்போது சீரமைக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் எ.வே.வேலு விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி திடீரென மழை தீவிரமெடுக்க தொடங்கியது. இதனால் 17ம் தேதி அதிகாலை முதல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு வரும் நீரின் அளவுக் கிடுகிடுவென உயர்ந்தது. இப்படியே போனால் அணையின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இத்துடன் காட்டாற்றுப் பகுதிகளில் இருந்து ஓடி வந்த வெள்ள நீரும், சிற்றாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது.
இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. மட்டுமல்லாது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருந்த குளம், குட்டை போன்ற நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தது. ஒரு கட்டத்தில் நீரின் அளவை தாங்க முடியாமல் இதில் உடைப்பும் ஏற்பட்டன. எனவே நீர் வெள்ளமாக ஊருக்கு புகுந்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரை ஓரம் உள்ள ஊர்கள் தனி தீவு போல மாறியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம் 100க்கும் அதிகமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மழை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு என்று சொல்லப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் மூழ்கி 16 பேர்,சுவர் இடிந்து விழுந்து 2 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என 20 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 304 குடிசைகள் பகுதியாகவும், 206 குடிசைகள் முழுமையாகவும், 6 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. கால்நடைகள், மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக மழை வெள்ளம் இணைப்பு சாலைகளை அடித்து சென்றதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ஒரு சிலை இடங்களில் சிறிய அளவில் மட்டும் பாதை துண்டிக்கப்பட்டிருந்தால், தற்காலிக பாதை அமைக்கப்பட்டு 5 நாட்களுக்கு பின்னர் இன்று இந்த வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.
ஆனால், திருச்செந்தூர்-திருநெல்வேலி சாலை பல இடங்களில் பலத்த சேதமடைந்துள்ளது. சில மீட்டர் தூரம் வரை சாலை இந்த தடமே இல்லாமல் வெள்ளம் அடித்துச் சென்றிருக்கிறது. இந்நிலையில், சேதமடைந்த சாலைகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு துண்டிக்கப்பட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், “வெள்ளப் பகுதிகளில் தடையின்றி நிவாரண உதவிகள் செல்கின்றன. மீட்புப்பணி பற்றி முதல்வர் அடிக்கடி விசாரிப்பது நாங்கள் வேலை செய்ய டானிக் போல் உள்ளது” என்றும் கூறியுள்ளார்.