திருப்பூர்: வடமாநில தொழிலாளர்கள் இப்போது முதலாளி ஆகியுள்ளனர்..!!
கிழிசல் நிறைந்த கந்தல் ஆடை, பிய்ந்து தைத்துப்போட்ட செருப்புகள், ஒரு சிறிய பை- இவைதான் பிஹாரின் வைஷாலி மாவட்டத்திலிருந்து திருப்பூருக்கு 2009 ஆம் ஆண்டில் விஜய்குமார் எடுத்து வந்த உடைமைகள். இன்றைக்கு அவர் புலம்பெயர்ந்த ஹிந்தி தொழிலாளர் என்ற அடைமொழியுடன் சுயமாக ஒரு தொழில் நிறுவனத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.
தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி களஞ்சியமான திருப்பூரில் விஜய்குமாருக்கு சொந்தமாக ஒரு ஆடை பிரிண்டிங் யூனிட் உள்ளது. விஜய்குமார் மட்டுமல்ல, அவரைப் போல் நூற்றுக்கணக்கான பேர் புலம்பெயர்ந்த கூலியாக வந்து தொழில்முனைவோர்களாக வெற்றிகரமாக சம்பாதித்து வருகின்றனர்.
இந்த சாதனையை திருப்பூர் கா ஜாடூ என்று வடமாநிலத்தினர் கூறுகின்றனர். இதற்கு திருப்பூரின் மந்திரம் என்று அர்த்தமாகும். இந்தப் போக்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ் தொழிலாளர்கள் மத்தியில் கலக்கத்தையும் பரிதவிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. தங்களது வேலை வாய்ப்புகளை வடநாட்டினர் வந்து பறிக்கின்றனர் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இந்த புலம்பெயர்ந்த தொழில்முனைவோரில் பலர் உள்ளூர் கலாசாரத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் சரளமாக தமிழ் பேசுகிறார்கள். ஃபில்டர் காபியை ருசிக்கிறார்கள். தும்பைப் பூவைப் போல வெள்ளை வெளேர் வேஷ்டியில் உலா வருகின்றனர்.
இதெல்லாம் இந்த வடமாநில புலம்பெயர்ந்தவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக அர்ப்பணிப்புடன் உழைத்ததற்கான அடையாளங்கள்.
விஜய்குமாரின் டெக்ஸ்டைல் யூனிட்டில், முருகப்பெருமானின் திருவுருவப் படம், புதிய மல்லிகைப்பூ மாலை அணிவிக்கப்பட்டு, சுவரில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தமிழ் கேலண்டரும் தொங்குகிறது. மிகச் சரளமாக தமிழ் பேசுகிறார் விஜய்குமார்.
10 ஆம் வகுப்பு முடித்தவுடன் ஊரைவிட்டு கிளம்பி திருப்பூருக்கு வந்தவர். 30 வயதான விஜய்குமார் இப்போது தன்னை ஒரு முதலாளியாக ஆக்கிக் கொண்டுள்ளார். துணிகளில் பிரிண்டிங் செய்யும் நிறுவனத்தை வைத்துள்ள விஜய்குமார் தனது கம்பெனியில் 10 சக பிஹாரிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ‘மேக் இன் இந்தியா’ வார்த்தையை பிரபலப்படுத்துவதற்கு முன்பே திருப்பூர் ‘மேக் இன் இந்தியா’ பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாகத் திகழ்கிறது. சிறிய நகரமான திருப்பூர் இப்போது வளர்ந்து வருகிறது. வட இந்தியர்களுக்கு இது பெரிய தொழில் முனைவோர் கனவு நகரமாகத் திகழ்கிறது.
பல ஆண்டுகளாக உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் , ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்தோர் தமிழர்களுக்கு சொந்தமான உற்பத்தி நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து கடுமையாக உழைக்கின்றனர்.
இப்போது அவர்களில் சிலர் சொந்தமாக மைக்ரோ மற்றும் சிறிய ஜவுளி நிறுவனங்களை நிறுவியுள்ளனர்.
திருப்பூர் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது, இதுபற்றி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டீமா) செயலாளர் ஜி.ஆர்.செந்தில்வேல் கூறுகையில், திறமையும், பெரிய விஷயத்தை செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளவர்கள் தொழில் முனைவோர்களாக மாறுகிறார்கள்., அவர்களின் கனவுகளை தமிழ் சமூகம் தடுக்கவில்லை.
ஐம்பதாண்டுகளாக நைக், அடிடாஸ், எச்&எம் போன்ற உலகளாவிய ஃபேஷன் பிராண்டுகளுக்கு இது ஒரு முக்கிய சப்ளையராக மாறியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் 54.2 சதவிகிதம் திருப்பூரின் பங்கு ஆகும். பருத்தி விவசாயம் மற்றும் நூல் உற்பத்திக்கு ஒரு காலத்தில் அறியப்பட்ட திருப்பூர், 1970 களில் பின்னலாடை உள்ளாடைகள் உற்பத்தி கேந்திரமாக மாறியது.
பருத்தி விவசாயிகள் சிறிய ஜவுளி நிறுவனங்களின் உரிமையாளர்களாக மாறினர். இந்த மாற்றம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் மலிவு விலையில் ஆடைகளுக்கான தேவையுடன் ஒத்துப்போனது.
1980களில், குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த வணிகர்கள் தங்கள் ஜவுளிப் பிரிவுகளை இங்கு அமைத்தனர். 1990 களில்தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் திருப்பூர் உள்ளே நுழைய ஆரம்பித்தனர்.
அது தமிழ்நாட்டின் விரைவான தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காலகட்டமாகும்.
உங்களிடம் திறமை இருந்தால், நாங்கள் உங்களை வரவேற்போம் – அதுதான் எங்கள் மந்திரம். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், எந்த சாதியை சேர்ந்தவர், எந்த மதத்தை பின்பற்றுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. உழைக்க விரும்புபவர்களை தமிழ்ச் சமூகம் வரவேற்கிறது என்றார் செந்தில்வேல்.
திருப்பூரின் சுமார் 10,000 பின்னலாடை நிறுவனங்களில் உள்ள 6 லட்சம் தொழிலாளர்களில் பாதி பேர் புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.