சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற திருவள்ளுவர் திருநாள் வழிபாடு

சுவிற்சர்லாந்தில் பேர்ன் மாநிலத்தில் பொய்யாமொழிப்புலவர் வள்ளுவப் பெருந்தகையின் திருத்தோற்ற திருவழிபாடு (குருபூசை) நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த திருத்தோற்ற திருவழிபாடானது (குருபூசை)பெரும் திருவிழாவாக சுவிற்சர்லாந்து – பேர்ண் வள்ளுவன் பள்ளி நல்கையில் நேற்று (26.02.2024) இடம்பெற்றுள்ளது.

தமிழ்மறை வழிபாடுகள்
இதன்போது ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கருக்கும், ஞானலிங்கேச்சுரத்தில் உள்ள அனைத்து தெய்வத்திருவுருவங்களுக்கும் சிறப்புத் திருமுழுக்கு மற்றும் வழிபாடுகள் சிவஞான சித்தர் பீடத்தில் நடைபெற்றுள்ளன.

இனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு எனும் ஐந்து முனைகளில் சைவநெறிக்கூடம் தொண்டாற்றி வருகின்றது.

திருக்குறள் அறம் இந்த நூற்றாண்டிலும் தமிழர் வாழ்வியலை செழுமை செய்யும் அறநூலாகும். இதனை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பொய்யா மொழிப்புலவர் இவ் உலகிற்கு அளித்திருப்பது என்பது தமிழர்களின் தொன்மைத் திறச்சான்றாகும்.

புலம்பெயர் நாட்டில் தலைமுறைகள் கடந்து வாழும் தமிழர்கள் வள்ளுவர் அருளிய தமிழ் அறத்தை உணர்ந்து வாழ அனைத்து தமிழர்களும் கட்டாயம் திருக்குறள் அறிந்திருக்க வேண்டும் எனும் பொருளில் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் நல்வாழ்த்துரை நிகழ்த்தியுள்ளார்.

தெய்வத்தமிழ் முப்பாலில் அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத்தறித்த குறள் அளித்த பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை பேர்ண் வள்ளுவன் பள்ளி மாணவர்கள் ஓதிநிற்க, திருச்சிவிகையில் வள்ளுவர் வலம்வந்த அழகுக்காட்சி இன்பத் தமிழருள் சூழ்ந்துகாக்கும் காப்பாக தோற்றம் அளித்துள்ளது.

பேர்ண் வள்ளுவன் பள்ளி ஆசிரியரும், பள்ளிநிறுவனருமான திருநிறை. முருகவேள் பொன்னம்பலம் நிறைவில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை எனும் குறளை எடுத்துக்காட்டி, ஒருவனுக்குச் சிறந்த செல்வமானது கேள்வியறிவாகிய செல்வம், அச்செல்வம் எல்லாச் செல்வங்களுள்ளும் தலைமையாதாகும், புலம் பெயர்ந்து சுவிசில் வாழும் நாம் செவியால் தமிழைக் கேட்டும், பெற்றோர் உற்றார் உறவினர்கள் எம் தமிழ்ச் செல்வங்களுடன் தாய்மொழி தமிழில் நன்றாக உரையாட வேண்டும்.

இதுவே எம் இளந்தமிழ்ச் செல்வங்கள் நன்கு தாய்மொழியில் பேச வழிசெய்யும். மேலும் நாளும் திருக்குறள் வீடுகளில் ஓத நாவில் தழிழோசை உச்சரிப்பு சிறக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *