பிப்ரவரி மாதம் தியேட்டரை அதிர வைக்க காத்திருக்கும் படங்களின் லிஸ்ட் இதுதான்!

2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்மஸ், அருண் விஜய் நடிப்பில் மிஷன்: சேப்டர் 1 போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் விபரம் இதோ..!
வடக்குப்பட்டி ராமசாமி
சந்தானம், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் விஸ்வ பிரசாத் தயாரித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் வரும் பிப். 2-ம் தேதி வெளியாகிறது.
டெவில்
‘சவரக்கத்தி’ படத்தின் இயக்குனா் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்’ திரைப்படமும் வரும் பிப்.2 -ம் தேதி ரிலீஸாகிறது. இதில், விதார்த், பூர்ணா, ஆதிக் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
லவ்வர்
அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துள்ள படம் ‘லவ்வர்'(Lover). ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வருகிற பிப்ரவரி 09 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லால் சலாம்
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோர் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தத் திரைப்படம் வரும் பிப்.9 ஆம் தேதி வெளியாகிறது.
சைரன்
அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்கும் ‘சைரன்’ என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வருகிற பிப்.16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான நேற்று வரை பாடல் தற்போது வெளியாகி உள்ளது. கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை சித் ராம் பாடியுள்ளார்.