இன்று அனுமன் ஜெயந்தி..! அனுமன் ஜெயந்தி விரதமும், பலன்களும்!
இராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுர்யம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர்.
சீதாதேவியால் சிரஞ்சீவி பட்டம் பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி, உபவாசம் தொடங்க வேண்டும். அதன் பிறகு அருகிலிருக்கும் அனுமன் கோவிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். வெற்றிலை மாலையும் சாற்றலாம். வெண்ணெய்க் காப்பு சாற்றியும் வணங்கலாம். இன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.
ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம். மாதங்களில் சிறப்பானது மார்கழி. அதே போல், திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. இந்த மூன்றும் இணைந்திருக்கும் இந்த நல்ல நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவரே ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். மாலையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலைகளை சாற்றி வழிபடலாம்.
இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபடுவதால் உங்கள் வாழ்வில் ஏற்படும் துக்கங்கள், கஷ்டங்கள் நீங்கும். பீடைகள் ஒழியும். கிரக தோஷங்கள் குறிப்பாக சனிக்கிரக தோஷங்கள் நீங்கும்.
இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், ஸ்லோகங்கள் கூறி வழிபட வேண்டும். அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி. அன்றைய தினம் நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். துன்பங்கள் விலகும். இன்பங்கள் பெருகும். குறிப்பாக சனி கிரகத்தின் பிடியில் உள்ளவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும்.