இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
மாசி மாதத்தில் வரும் பெளர்ணமியுடன் மகம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளையே நாம் மாசி மகமாக கொண்டாடி வருகிறோம். பொதுவாக எந்த ஒரு விரத நாளும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கு விரதம் இருந்து, வழிபட்டு, பயன்பெறுவதற்கான நாளாக தான் இருக்கும். ஆனால் மாசி மகம் என்பது அனைத்து தெய்வங்களையும், முன்னோர்களையும் வழிபட்டு, பித்ரு கடன் நிறைவேற்றுவதற்கும், புனித நீராடுவதற்கும், திருத்தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கும், பிரச்சனைகள் தீர பரிகாரங்கள், பிரார்த்தனைகள் ஆகியவை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாக கருதப்படுகிறது. இதனால் பிரச்சனைகள் தீர வேண்டும் என்பவர்களுக்கும், இறையருள் பெற வேண்டும் என்பவர்களுக்கும், முன்னோர்களின் ஆசிகளை பெற வேண்டும் என்பவர்களுக்கும் ஏற்ற நாளாக உள்ளது.
பல திருத்தலங்களில் பெளர்ணமி கிரிவலம் சென்று, வழிபடும் வழக்கம் பக்தர்களிடம் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை போன்ற புண்ணிய தலங்களில் அனைத்து நாட்களிலும் கிரிவலம் செல்லலாம் என்றாலும், பெளர்ணமி கிரிவலத்திற்கு மகத்துவம் அதிகம். குடும்பத்தில் உள்ள எந்த பிரச்சனை தீர வேண்டும் என்றாலும், கடன் தொல்லையில் இருந்து விட வேண்டும் என்றாலும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றாலும், செல்வம் சேர வேண்டும் என்றாலும், வறுமை நீங்க வேண்டும் என்றாலும், பாவங்கள்- சாபங்கள் விலக வேண்டும் என்றாலும் மாசி மகம் நாளில் கிரிவலம் சென்றால் இவை அனைத்தும் தீரும்.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 23ம் தேதி மாலை 4.22 மணிக்கு தொடங்கி 24ம் தேதி மாலை 6.18 மணிக்கு நிறைவடைகிறது.
எனவே, இன்று 23ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நாளில் விரதம் இருந்து, பெளர்ணமி கிரிவலம் வருவது அளவில்லாத பலன்களை அள்ளிக் கொடுப்பதுடன் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கக் கூடியது. இந்த நாளில் திருவண்ணாமலை திருத்தலம் மட்டுமின்றி, திருப்பரங்குன்றம், பழநி, சதுரகிரி மலை, சென்னிமலை போன்ற மலை உள்ள திருத்தலங்களிலும் கிரிவலம் வந்து வழிபடுவது வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கக் கூடிய தன்மை கொண்டதாகும். மாசி மகத்தன்று பெளர்ணமி கிரிவலம் வருபவர்களுக்கு மறுபிறவி என்பது ஏற்படாது. அது மட்டுமின்றி, அவர்கள் வாழும் வாழும் நாட்களில் அனைத்து விதமான நலன்களையும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ முடியும்.