வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்..!
நாடே எதிர்பார்த்துக்கொண்டு இருந்த லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி முடிய 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தவரை முதல் கட்ட தேர்தலில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்களிக்க அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், 18 வயது பூர்த்தி அடைந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சத்ய பிரதா சாகு கூறியதாவது:- வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் படிவம் 6-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளுக்கு 10 நாட்கள் முன்புவரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்க முடியும். அதன்படி இன்றுதான் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எனவே இன்றைக்குள் விண்ணப்பித்தவர்களின் பெயர் பரிசீலனை செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். அவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியும்” என்றார். முன்னதாக சத்யபிரதா சாகு கூறியதாவது:- தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் இனி மாவட்டங்களில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோர் தங்கள் பணியை தொடங்குவாரகள்.
தேர்தல் செலவினம் தொடர்பான கண்காணிப்பு தொடங்கியுள்ளது. இனி தேர்தல் ஆணையம் உத்தரவுகளை நிறைவேற்றுவோம். இனி ஒவ்வொருவரும் அதிகபட்சம் ரூ 50 ஆயிரம் வரைதான் ரொக்கப் பணத்தை கொண்டு செல்ல முடியும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது” என்றார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 20 ஆம்தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு 27 ம் தேதி கடைசி நாள் ஆகும். 28 ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற வரும் 30 ம் தேதி கடைசி நாள் ஆகும்
.அதன்பிறகு ஏப்ரல் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும். தமிழ்நட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் அன்றைய தினம் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் தேர்தல் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், வாக்களிக்க வாக்காளர்கள் ஆர்வமாகியுள்ளனர். வரும் தேர்தலில் வாக்களிக்க 96.8 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 49.7 கோடி பேர் ஆண் வாக்காளர்கள், 47.1 கோடி பேர் பெண்கள். 1.8 கோடி பேர் முதல்முறை வாக்காளர்கள் ஆவார்கள்.