நாளை தான் தீபாவளி.. தமிழக மக்களுக்கு கொண்டாட ஆசை இருக்காதா? விடுமுறை வேண்டும்: எல்.முருகன் கோரிக்கை!
மதுரை: மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனையொட்டி, மத்திய அரசு அலுவலகங்களுக்கு மதியம் வரை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் விடுமுறை அறிவித்துள்ளன. அதுபோல், தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் இதுதொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவது ஒவ்வொரு இந்தியனின் கனவு. இது இந்தியர்களின் உணர்வுப்பூர்வமான தருணம். பாரத தேசம் முழுவதும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் வந்துவிடாதா என்று ஏங்கித் தவித்த இந்தியர்களுக்கு நாளை தான் பொன்னான நாள். இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு இந்தியனுக்கும் நாளை தான் தீபாவளி.
ராமர் கோவில் திறப்பையொட்டி தமிழகத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அது அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது. மக்களின் விருப்பத்தை அறிந்து அரசு நிறைவேற்ற வேண்டும். ராமபிரான் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு அயோத்திக்கு வரப் போவதை கொண்டாடி தீர்க்கும் ஆசை தமிழக மக்களுக்கு இருக்காதா? எனவே, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுவதற்காக தமிழ்நாட்டில் பொது விடுமுறையை அரசு அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.