டாப் 5 விக்கெட் டேக்கர்ஸ்.. உச்சத்தில் அஸ்வின்.. பும்ரா, ஜடேஜாவை முந்திய இங்கிலாந்து வீரர்!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் பேஸ் பால் அணுகுமுறையாலும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடியாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற பின் இங்கிலாந்து அணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் பேஸ் பால் குறித்து புகழ்ந்து தள்ளினார்கள். இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் பேஸ்பால் என்றால் என்ன என்று புரிந்திருக்கும் என்றும் விமர்சித்தார்கள். தற்போது இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பேஸ்பால் என்ற பெயரினை வழங்கியது மீடியாக்கள் என்று பல்டி அடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம். இந்த பட்டியலில் 5வது இடத்தில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் இருக்கிறார். 4 போட்டிகளில் விளையாடிய குல்தீப் யாதவ் ஒரு முறை 5 விக்கெட்டுகள் உட்பட மொத்தமாக 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அதேபோல் 4வது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 4 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளுடன் 4வது இடத்தில் இருக்கிறார். முதல் மற்றும் 3வது போட்டியில் அசத்தலாக செயல்பட்ட ஜடேஜா, அடுத்த 2 போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. அதேபோல் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 4 போட்டிகளில் விளையாடி 623 பந்துகள் வீசி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
டாப் 5 பட்டியலில் இருக்கும் ஒரே வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான். இந்திய அணியின் மற்றொரு முக்கிய வேகப்பந்துவீச்சாளரான சிராஜ் 6 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்திய நிலையில், இந்திய மண்ணில் பும்ரா மட்டும் 19 விக்கெட்டுகளை சாய்த்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் டாம் ஹார்ட்லி இடம் பிடித்துள்ளார். 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஹார்ட்லி மொத்தமாக 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்த தொடரில் அதிக பந்துகளை வீசிய வீரர் டாம் ஹார்ட்லி தான். மொத்தமாக 5 போட்டிகளிலும் சேர்த்து 1,504 பந்துகளை வீசி இருக்கிறார். இவருக்கு பின் சோயப் பஷீர் 1,015 பந்துகளை வீசி இருக்கிறார். மேலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் மொத்தமாக 26 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.