வரலாற்று சாதனையை நோக்கி… ஆஸி., ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணா

அதிக வயதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் மகுடம் சூடிய வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோஹன் போபண்ணா நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன், மெல்பர்ன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, சீனாவின் தாமஸ் மச்சாக் மற்றும் செக்குடியரசின் ஜிஜேன் ஜாங் இணையுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை ரோஹன் – எப்டன் இணை 6-3 என எளிதாக வசப்படுத்தியது. ஆனால், இரண்டாவது செட்டை 3-6 என கோட்டை விட்டது.
இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்க கூடிய மூன்றாவது செட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதில், இரு ஜோடிகளும் பரஸ்பரம் மிரட்டலாக ஆடியதால் போட்டியில் அனல் பறந்தது. அத்துடன், டை-பிரேக்கர் வரை ஆட்டம் சென்றதால் விறுவிறுப்பின் உச்சம் தொட்டது. இருந்த போதும் ரோஹன் – எப்டன் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். 2 மணி நேரம் கடந்து நடைபெற்ற இந்த யுத்தத்தில் ரோஹன் – எப்டன் 6-3, 3-6, 7-6 என்ற செட்களில் போராடி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி ரோஹன் போபண்ணா சாதித்தார். அத்துடன், ஆடவர் இரட்டையர் பிரிவில் அதிக வயதில் இறுதிப் போட்டிக்குள் தடம் பதித்தவர் என்ற தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார். தற்போது 43 வயதாகும் ரோஹன் போபண்ணா, ஆடவர் இரட்டையர் பிரிவில் இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை. எனவே, அந்த குறையை நடப்பு ஆஸ்திரேலிய ஓபனில் போக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஜனவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில இத்தாலியின் ஆண்ட்ரே வவசோரி மற்றும் சிமோன் பொலேல்லி இணையுடன் ரோஹன் – எப்டன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில், வெற்றிபெறும் பட்சத்தில், கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் ஆடவர் இரட்டையர் பிரிவில் அதிக வயதில் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோஹன் போபண்ணா நிகழ்த்துவார். முன்னதாக, 2022 ஆம் ஆண்டு நெதர்லாந்து வீரர் ஜீன் ஜூலியன் ரோஜர் 40 வயதில், பிரெஞ்சு ஓபனில் ஆடவர் இரட்டையர் பிரிவில் மகுடம் சூடினார். இந்த சாதனையை நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏற்கனவே, இத்தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் ஆடவர் இரட்டையர் பிரிவில் அதிக வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானது குறிப்பிடத்தக்கது.