டொயோட்டா ஷோரூம்களில் இனி ஜே, ஜேனு கூட்டம் குவிய போகுது!! புக்கிங்கை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க!
டொயோட்டா (Toyota), இந்தியாவில் அதன் பிரபல கார்களான இன்னோவா, ஃபார்ச்சூனர் மற்றும் ஹிலுக்ஸ் பிக்-அப் டிரக் வாகனத்தை மீண்டும் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பும் பணியை துவங்கியுள்ளது. கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் இந்த டொயோட்டா கார்கள் டீலர்களுக்கு வழங்கும் பணிகள் சில காரணங்களினால் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், அவை மீண்டும் துவங்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் ஜப்பான் ஸ்டைல் கார்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. இதனை சுஸுகி, டொயோட்டா போன்ற ஜப்பான் கார் நிறுவனங்கள் நன்கு பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக, சுஸுகி கார்கள் இந்தியாவில் மாதந்தோறும் இலட்சக்கணக்கில் விற்பனையாகுகின்றன. அதேபோல், டொயோட்டா கார்களுக்கும் நம் நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது.
முக்கியமாக, டொயோட்டாவின் இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் கடந்த பல வருடங்களாக இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளன. இந்த நிலையில், இன்னோவா, ஃபார்ச்சூனர் மற்றும் ஹிலுக்ஸ் பிக்-அப் ட்ரக்கை உற்பத்தி செய்து டீலர்களுக்கு அனுப்பும் பணிகளை கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் டொயோட்டா திடீரென நிறுத்தியது.
இதனால், ஷோரூம்களில் ஸ்டாக்கில் இருந்த கார்கள் காலியான பின் மேற்கூறப்பட்ட 3 டொயோட்டா கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளும் நிறுத்தப்பட்டன. இன்னோவா, ஃபார்ச்சூனர் மற்றும் ஹிலுக்ஸ் கார்களின் உற்பத்தியில் சில சான்றிதழ் முறைகேடுகளை டொயோட்டா கண்டறிந்ததை அடுத்து, கார்களை ஷோரூம்களுக்கு அனுப்பும் பணிகளை முழுவதுமாக, தற்காலிகமாக நிறுத்தியது.
கார்களின் பாதுகாப்பு தரநிலைகளை உறுதிப்படுவதற்காக இந்த கடினமான முடிவை டொயோட்டா கையில் எடுத்தது. இந்த நிலையில், பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் விசாரணைகளுக்கு பிறகு தற்போது இந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மேற்கூறப்பட்ட 3 கார்களை தொழிற்சாலையில் இருந்து ஷோரூம்களுக்கு அனுப்பும் பணிகளை மீண்டும் டொயோட்டா துவங்கியுள்ளது.
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், டொயோட்டா தொழிற்சாலையில் இருந்து இந்த கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு அனுப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டன. தற்போது, ஷோரூம்களுக்கு வந்த கார்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கி உள்ளன.
இந்த வகையில் புதியதாக டொயோட்டா தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் இன்னோவா, ஃபார்ச்சூனர் & ஹிலுக்ஸ் கார்களில் எந்த அப்டேட்டும் வழங்கப்படவில்லை. அதாவது, 2023 அக்டோபரில் நிறுத்தப்படுவதற்கு முன்னர் எப்படி இருந்ததோ அதே மாதிரியாகவே இந்த கார்கள் தற்போது ஷோரூம்களுக்கு வர ஆரம்பித்துள்ளன.
கார்கள் ஷோரூமிற்கு வருவது நிறுத்தப்பட்டதால், இந்த கார்களுக்கான முன்பதிவுகளை டீலர்ஷிப் ஷோரூம்கள் தற்காலிகமாக நிறுத்தி இருந்தன. இந்த நிலையில், இந்த 3 டொயோட்டா கார்களுக்கான முன்பதிவுகளும் நாடு முழுவதும் மீண்டும் துவங்கப்பட்டு உள்ளன. இடைப்பட்ட இந்த மாதங்களில் இந்த டொயோட்டா கார்களை வாங்குவதற்கு நிறைய பேர் காத்து இருந்திருப்பர் என்பதால், இனி வரும் நாட்களில் புக்கிங் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.