திருச்சி நவலூர் ஜல்லிக்கட்டில் சோகம்… வாய்க்காலில் விழுந்து ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு!
நேற்று திருச்சி நவலூர் குட்டப்பட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், சோகத்தை ஏற்படுத்தும் விதமாக வாய்க்காலில் விழுந்து ஜல்லிக்கட்டு காளை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது பார்வையாளர்களையும், மக்களையும் அதிர்ச்சியடைய செய்தது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகளும், 320 மாடுபிடி வீரர்களும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றனர்.
நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. சிறப்பாக பங்கேற்ற மாடு பிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் இருசக்கர வாகனம், சைக்கிள், தங்க காசு, வெள்ளி காசு, ப்ரிட்ஜ், குக்கர், டேபிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 27 மாடு பிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 17 பேர், பார்வையாளர்கள் 10 பேர் என மொத்தன் 54 பேர் காயமடைந்தனர். காயமடைந்ததில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரையைச் சேர்ந்த அருண் பிரதாப் என்பவரது காளை வாடிவாசல் வழியாக வெளியே சென்ற பின்பு போட்டி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் கட்டளை மேட்டு வாய்க்கால் பாலத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது. உடனடியாக காளையை தீயணைப்புத் துறை வீரர்கள் மீட்டனர். ஆனால் பரிதாபமாக காளை உயிரிழந்தது. இது குறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.