“பிரதமர் மோடியின் முயற்சியால் உலகின் பல மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு” – அண்ணாமலை பெருமிதம்
தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், “பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்று திகழ்கிறது. உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்று திகழ்கிறது. உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது. பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம். அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார். ஆளுநரைப் போல் அண்ணாமலையும் காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தையே பகிர்ந்து கருத்து தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.