திருச்சி-க்கு கிடைத்த பொக்கிஷம்.. புதிய ELCOT ஐடி பார்க் ரெடி..!!
சென்னை தாண்டி தமிழ்நாட்டில் பல மாவட்டத்தில் இப்போது ஐடித்துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாகக் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகியவை அடுத்தடுத்து அதிகப்படியான ஐடி நிறுவனங்களை ஈர்த்து வருகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் படித்த திறமையான பட்டதாரிகளும், பணியாளர்களும் இருக்கும் காரணத்தால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் எவ்விதமான தயக்கமும் இல்லாமல் அனைத்து மாவட்டத்திலும் அலுவலகத்தைத் திறக்க தயாராகி வருகிறார்கள்.
பிற மாநிலத்தில் இட வசதி, போக்குவரத்து வசதிகளை வைத்து புதிய முதலீடுகளையும், புதிய நிறுவனங்களையும் ஈர்த்து வரும் வேளையில் தமிழ்நாட்டில் மட்டுமே திறமையான ஊழியர்களை முன்னிறுத்தி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு அதன் பின்பு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சியில் ஏற்கனவே கட்டப்பட்டுப் பயன்பாட்டில் இருக்கும் ELCOT ஐடி பார்க்கில் விடார்ட் டெக்னாலஜிஸ், ஐ லிங்க் சிஸ்டம்ஸ், டிசாஸ்டர் ரெக்கவரி சென்டர், வூரம் டெக்னாலஜிஸ், விஆர்டெல்லா ஐடி சர்வீசஸ், GI tECH GAMING போன்ற பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ELCOT என்பது தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஐடி உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் அமைப்பாகும்.
இந்த நிலையில் புதிதாக 1.16 லட்சம் சதுரடி பரப்பளவில் புதிய ஐடி டவர் கடந்த சில வருடங்களாகக் கட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்து திறக்கப்படத் தயாராகியுள்ளது. இப்புதிய எல்காட் ஐடி பார்க்-ன் போட்டோ சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
திருச்சி நாவல்பட்டுப் பகுதியில் இருக்கும் எல்காட் ஐடி பார்க்கின் 2வது கட்ட திட்டத்தில் 1.16 லட்சம் சதுரடி பரப்பளவில் புதிய ஐடி டவர் சுமார் 48 கோடி ரூபாய மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய ஐடி பார்க் திருச்சியில் இருக்கும் அலுவலக ரியல் எஸ்டேட் டிமாண்ட்-ஐ கட்டாயம் பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது.
திருச்சி நாவல்பட்டு எல்காட் ஐடி பார்க்-ல் இருக்கும் நிறுவனங்கள் சதுரடி 20 முதல் 40 ரூபாய் வீதம் மாத வாடகையில் அலுவலகம் அமைத்துக்கொள்ள முடியும். மொத்த எல்காட் ஐடி பார்க் 147.61 ஏக்கரில் அமைந்துள்ளது.
இதேபோல் கோயம்புத்தூரில் ELCOT புதிய மற்றும் அதிநவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் ஐடி டவர் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் ELCOT ஐடி பார்க்கில் 2வது IT பார்க் திறப்பதற்குத் தயாராக உள்ளது, இது சுமார் 2.66 லட்சம் சதுரடியில் சுமார் 114.16 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு உள்ளது.
இதே வேளையில் ELCOT 3வதாக மாபெரும் ஐடி பார்க் கட்டும் திட்டத்தை முன்வைத்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. புதிய ஐடி டவர் கோயம்புத்தூர் ELCOT PARK-ல் சுமார் 1 மில்லியன் சதுரடி அதாவது 10 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் ELCOT ஐடி பார்க் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் அக்சென்சர் சுமார் 3 தளங்களில் மெகா அலுவலகத்தைத் திறக்க உள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.