திருச்சியே திரும்பி பார்த்துச்சு.. தமிழ்நாட்டை பெருமைப்படுத்திய சுர்ஜித்! கேலோ இந்தியாவில் வெள்ளி
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா தொடரில் களரிப்பயிற்று போட்டியில் சுவடுகள் பிரிவில் தமிழகத்துக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்து பெருமைப்படுத்தி இருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் சுர்ஜித்.
மாநிலங்களுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கேலோ இந்தியா விளையாட்டுத் தொடர் போட்டிகள் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் திருச்சியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியாவில் களரிப்பயிற்று போட்டியில் சுவடுகள் பிரிவில் தமிழகத்துக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
தேசிய அளவிலான கேலோ இந்தியா களரிபயிற்று விளையாட்டுப் போட்டி திருச்சியில் சனிக்கிழமை தொடங்கியது. திருச்சி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் வரும் 29 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும் இப்போட்டியை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தொடங்கி வைத்தாா். இதில் கேரளம், தமிழகம், புதுச்சேரி, கா்நாடகம், உத்திரபிரதேசம், தில்லி, கா்நாடகம், ஹரியாணா, மத்தியபிரதேசம், அஸ்ஸாம், சத்தீஸ்கா், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சோந்த 103 வீரா்கள், 87 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.
சுவடுகள், கெட்டுக்காரி (கம்புச் சண்டை), வாள் சண்டை, ஹை கிக் ஆகிய 4 பிரிவுகளில் 18 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனிநபா், குழு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாளான சனிக்கிழமை காலையில் மகளிருக்கான கம்புச் சண்டை குழு போட்டியில் கேரளத்தைச் சோந்த அனுகிரஹா – துா்கா இணை முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. அதே மாநிலத்தைச் சோந்த ஸ்ரீலட்சுமி – அயனா இணை இரண்டாமிடம் பிடித்து வெள்ளியையும், அஸ்ஸாமைச் சோந்த சமிக்ஷா பேகம் – ஜிக்யாசா அம்ஃபி இணை மற்றும் கேரளத்தைச் சோந்த வித்யாலட்சுமி – வைகாலட்சுமி இணை மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனா்.