லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: தேயிலை தூள், காய்கறிகள் தேக்கம் @ நீலகிரி

உதகை: லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தால், நீலகிரி மாவட்டத்தில், ரூ.18 கோடி மதிப்பிலான தேயிலை தூள் தேக்கமடைந்துள்ளது.
மேலும், காய்கறிகள் தேக்கமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக தேயிலை உற்பத்தி உள்ள நிலையில், குன்னூரில் உள்ள ஏல மையத்தில் தேயிலை தூள் ஏலம் விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. நாட்டிலேயே 2-வது பெரிய ஏல மையமான குன்னூர் தேயிலை ஏல மையத்தில், தென் மாநிலங்களில் அதிகபட்ச தேயிலை தூள் ஏலம் விடப்படுகிறது. வாரத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரையிலான தேயிலை தூள் ஏலம் விடப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 3-வது தேயிலை ஏலத்தில் 16 லட்சம் கிலோ ஏலத்துக்கு வந்தது. இதில்,10.46 லட்சம் கிலோ ரூ.9.80 கோடிக்கு விற்பனையானது. இதற்கிடையே, லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பதால், தேயிலை தூள் கொண்டு செல்ல முடியாமல் தேக்கமடைந்துள்ளது.
இது குறித்து குன்னூர் டிரான்ஸ்போர்ட் சங்க தலைவர் சேகர் கூறும்போது, ”லாரி ஸ்டிரைக் காரணமாக கடந்த வார ஏலத்தில் நடந்த தேயிலை தூள் மட்டும் ரூ.8 கோடி அளவுக்கு தேக்கமடைந்துள்ளது. இதுமட்டுமின்றி தற்போது நடந்துள்ள 3-வது ஏலத்தில் ரூ.9.80 கோடி மதிப்பிலான தேயிலை தூள் தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நடராஜ் கூறும்போது, ”லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்ததால் நீலகிரி மாவட்டத்தில் 350 லாரிகள் இயங்க வில்லை. இதனால், தோட்டங்களில் கேரட் உட்பட காய்கறிகள் அறுவடை நடக்காமல் உள்ளன. அறுவடை செய்யப்பட்ட காய் கறிகளும் தேங்கியுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் டன் காய்கறிகள் தேக்கமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.