இட்லி, தோசைக்கு ஏற்ற அருமையான கடலை பருப்பு சட்னியை இப்படி செய்து பாருங்க.!
இந்த பரபரப்பான வாழ்க்கை முறையில் காலை எழுந்ததும் என்ன சமையல் செய்யலாம் என்றும், முக்கியமாக எதை விரைவாக சமைக்கலாம் என்றும் தான் முதல் நாள் இரவே மெனுவை தயார் செய்ய மண்டையை போட்டு குழப்பி கொள்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.
பொதுவாக காலையில் சமைக்க அதிக நேரம் எடுக்காத எளிதான இட்லி, தோசையை தான் தேர்வு செய்வார்கள். அவ்வாறு எளிதாக செய்யக்கூடிய இந்த உணவுகளுக்கு சேர்த்து சாப்பிட சுவையான சட்னியை தான் அனைவரும் விரும்புவார்கள்.
அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த ரெசிபி உங்களுக்காக தான்…
ஆம், நாம் இங்கே காணப்போகும் ரெசிபியானது இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான ‘கடலை பருப்பு சட்னி’ தான்.
தேவையான பொருட்கள் :
கடலைப் பருப்பு – 1/4 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
வரமிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 3 பல்
புளி – 1 துண்டு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
தாளிக்க தேவையா பொருட்கள் :
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 1
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து அதே கடாயில் வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ள அனைத்தும் ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் துருவிய தேங்காய், புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க எடுத்து வைத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அதில் வரமிகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் வதக்கி இறக்கி சட்னியுடன் சேர்த்து கிளறினால் சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி.
இதை சூடான இட்லி, தோசையுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள்…