‘இதை முதல் நாளே செஞ்சு இருக்கணும்’: இந்திய நிர்வாகம் மீது கவாஸ்கர் கடும் சாடல்
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 455 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் 131 ரன்களையும், ஜடேஜா 112 ரன்களையும், சர்ஃபராஸ் கான் 62 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகள், ரெஹன் அகமது 2 விக்கெட்டுகள், ஆண்டர்சன் , ஹார்ட்லி, ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இனிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்களை எடுத்தார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், பும்ரா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 51 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது. அபாரமான சதம் விளாசிய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104 ரன்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக ஓய்வுக்குச் சென்றார். கில் 65 ரன்னுடனும், குலதீப் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.