Tuberculosis | காசநோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும்..? சாதாரண இருமலுக்கும் காசநோய் இருமலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன..?
இன்றும் கூட உலகம் முழுவதும் காசநோய் பரவி மக்களுக்கு நோய் பரவலையும் இறப்பையும் ஏற்படுத்துகிறது. காசநோய் பரவலை தடுக்கவும் இதற்கான முறையான சிகிச்சை எடுக்கவும் ஆரம்பத்திலேயே இதன் அறிகுறிகளை தெரிந்துகொள்வது அவசியமாகும். அதற்கு முதலில் சாதாரண இருமலுக்கும் காசநோய் காரணமாக வரும் இருமலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
இதை எப்படி கண்டுபிடிப்பது?
இருமலின் கால அளவு மற்றும் தொடர்ச்சி: காசநோய் இருமலானது தொடர்ச்சியாக நீடிக்க கூடியது. மூன்று வாரங்களுக்கு மேல் இந்த இருமல் நீடிக்கும். ஆனால் நமக்கு சாதாரணமாக வரும் இருமல் ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்குள் நின்று போய்விடும். காசநோய் இருமல் நாளாக நாளாக மோசமடையும் தன்மை கொண்டது.
காசநோய் இருமலின் போது சளியோடு சேர்த்து ரத்தமும் வரும். ஆனால் சாதாரண இருமலின் போதும் சளி வெளியேறினாலும் அதில் ரத்தம் ஏதும் இருக்காது.
இதோடு சேர்ந்து வரக்கூடிய அறிகுறிகள்:
காசநோய் இருமலோடு சேர்த்து கூடவே உடல் சோர்வு, காரணமின்றி உடல் எடை குறைதல், இரவு நேரத்தில் வியர்வை கொட்டுதல், நெஞ்சு வலி போன்றவையும் வரக்கூடும். இந்த அறிகுறிகள் சாதாரண இருமலின் போது இருக்காது. அப்படியே இருந்தாலும் அதிகமாக வெளியே தெரியாது.
காசநோயின் பிற அறிகுறிகள்:
உடல் சோர்வு: ஓய்வெடுத்த பிறகும் உடல் பலவீனம் மற்றும் களைப்பு தொடர்ச்சியாக இருக்கும். இதெல்லாம் காசநோயின் பொதுவான அறிகுறிகள். இந்த உடல் சோர்வை தூங்குவதாலோ அல்லது ஓய்வெடுப்பதாலோ போக்க முடியாது.
காரணமின்றி உடல் எடை குறைதல்: காசநோய் காரணமாக அதிகமாக பசி எடுக்காது. இதனால் உடல் எடை தானாக குறையும். இந்த உடல் எடை குறைப்பு வேகமாக இருக்கும்.
காய்ச்சல்: மதிய வேளை அல்லது மாலையில் காய்ச்சல் வருவது காசநோயின் முக்கியமான அறிகுறியாகும். இந்தக் காய்ச்சலை குணப்படுத்தாவிட்டால் வாரங்கள் அல்லது மாதக்கணக்கில் கூட நீடிக்கும்.
இரவில் வியர்வை வருவது: இரவு தூங்கும் போது அதிகப்படியான வியர்வை வருவதும் காசநோயின் முக்கியமான அறிகுறியாகும். இது நாம் நினைப்பதை விட மிக மோசமாக இருக்கும். இதனால் உங்கள் படுக்கை துணிகள் கூட நனைந்து போகும்.
நெஞ்சு வலி: மார்பக பகுதியில் அசௌகர்யம் அல்லது வலி இருந்தால், அதுவும் குறிப்பாக இருமலின் போதோ அல்லது ஆழ்ந்து மூச்சுவிடும் போதோ இந்த வலி இருந்தால் அதற்கு நுரையீரல் அல்லது அதனைச் சுற்றியுள்ள திசுக்களில் ஏற்பட்டுள்ள வீக்கமே காரணமாகும்.
இந்த அறிகுறிகளோடு சேர்த்து தொடர்ச்சியான இருமல் இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே காசநோயை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் நாமும் ஆரோக்கியம் பெறுவதோடு மற்றவர்களுக்கும் இந்நோய் பரவாமல் இருக்கும்.