அப்படியே தலைகீழா மாறிடுச்சே! காஷ்மீரில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம்.. ஏன் இப்படி?
டெல்லி: காஷ்மீரில் அதிகட்சமாக நேற்று 15 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. கடந்த 20 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் இந்த அளவு வெப்பம் பதிவாவது இதுவே முதல் முறையாகும்.
தலைநகர் டெல்லியில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது.
இந்தியாவின் வட எல்லையான காஷ்மீர் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது. இதனால், அங்கு எப்போதுமே தட்பவெப்ப நிலை குளிராக இருக்கும். ஆண்டு முழுவதுமே குளிர்ச்சியான சூழலே காணப்படும். குறிப்பாக குளிர் காலம் வந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக அமையும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை அங்கு குளிர் காலம் என்பதால் வெப்ப நிலை உறை நிலைக்கு சென்று விடும்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஜீரோ டிகிரிக்கு கீழ் வெப்பநிலைக்கு சென்றது. ஆனால், தற்போது காஷ்மீரில் பருவமழை வழக்கத்திற்கு மாறாக மாறிவிட்டது. ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு 100 சதவீதம் பற்றாக்குறை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வழக்கமாக நிலவும் குளிருக்கு பதிலாக தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளது.
வெப்பம் அதிகரிப்பு: நேற்று காஷ்மீரில் அதிகட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. கடந்த 20 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் இந்த அளவு வெப்பம் பதிவாவது இதுவே முதல் முறையாகும். காஷ்மீரின் சமவெளிப்பகுதிகளில் 6 முதல் 8 டிகிரி செல்சியஸ் ஆக வெப்ப நிலை நிலவுகிறது. வட இந்திய மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில் காஷ்மீரில் இயல்புக்கு மாறாக வெப்பம் அதிகரித்து இருப்பது மக்களுக்கு சற்று வியப்பை அளித்துள்ளது.
டெல்லியில் நடப்பு குளிர் காலத்தில் மிக குறைந்த வெப்ப நிலை இன்றுதான் பதிவானது. குறைந்தபட்ச வெப்ப நிலை 3.5 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. நடுங்க வைக்கும் குளிரால் டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வழக்கத்திற்கு மாறான இந்த தட்பவெப்ப நிலை குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வெப்ப நிலையில் இப்படி திடீரென மாற்றம் ஏற்படுவது சமீபத்திய காலங்களில் சகஜமாக மாறிவிட்டது.
இயல்புக்கு மாறான காலநிலை: சம்மரில் இதேபோன்ற சூழலை காண முடிந்தது. எனினும், வரும் நாட்களில் மேற்கில் இருந்து வரும் மாற்றம் காரணமாக பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழலால் குளிர்கால விளையாட்டுக்கள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், சுற்றுலாப்பயணிகள் வருகையும் கணிசமாக குறைந்துள்ளது.
குல்மர்க் உள்ளிட்ட பகுதிகளில் ஹோட்டல் புக்கிங்கள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக இந்த பகுதிகளில் குளிர் காலத்தில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், நடப்பு ஆண்டு இயல்புக்கு மாறான காலநிலையால் சுற்றுலாப்பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது.