‘ட்விஸ்ட்’.. ஞானவாபி மசூதி இடத்தில் இதற்கு முன்பு இந்து கோவில் இருந்தது – தொல்லியல் ஆய்வில் தகவல்
வாரணாசி: ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஞானவாபி மசூதிக்கு முன்பு அந்த இடத்தில் மிகப்பெரிய இந்து கோவில் அமைந்து இருந்ததாக இந்திய தொல்லியல் துறை ஆய்வில் உறுதி செய்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி என்பது பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியாகும். 2014ம் ஆண்டை தொடர்ந்து 2019ல் வாரணாசி தொகுதியில் தான் பிரதமர் மோடி போட்டியிட்டு எம்பியாகி பிரதமராக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தான் வாரணாசியில் ஞானவாபி மசூதி தொடர்பான விவாதம் கடந்த ஆண்டு கிளம்பியது. அதாவது ஞானவாபி மசூதி பகுதியில் பழமையான இந்து கோவில் சிங்கார கவுரி உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தான் ஆண்டு முழுவதும் பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இந்திய தொல்லியல் துறையில் மசூதியில் ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவால் மசூதியில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டனர். 2023 ஜூலை மாதம் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு முடிவுகள் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கவரில் இந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அந்த அறிக்கை விபரம் என்பது வெளியானதால் பிரச்சனை ஏற்படும் என்பதால் அது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. இதற்கிடையே தான் தற்போது அந்த அறிக்கையின் நகல்கள் வழக்கு தொடர்பாக இந்து மற்றும் இஸ்லாமியர்கள் சார்ந்த வழக்கறிஞர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ள இடத்தில் இதற்கு முன்பு பெரிய இந்து கோவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதாக இந்துக்கள் சார்பில் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அறிவியல் முறையிலான ஆய்வில் பழங்கால கட்டடத்தில் எச்சங்கள், கலை, சிற்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி பார்த்தால் தற்போதைய கட்டடம் (மசூதி) கட்டுவதற்கு முன்பு அங்கு இந்து கோவில் இருந்ததாக கூறலாம்.
மேலும் அங்கு கிடைத்த ஒரு கல்வெட்டு அரபு-பாரசீகத்தில் உள்ளது. அதில் அவுரங்கசீப்பின் காலத்தில் 1667-77 மசூதி கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது 17 வது நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.