தலைவலி வகைகள்!
நன்றி குங்குமம் டாக்டர்
பொதுவாக தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியை உணரும் ஒரு நிலையாகும்.
தலைவலி எல்லா தரப்பினருக்கும் வருகின்ற ஒரு பொதுவான நோய் என்றாலும், அதில் சில வரப்போகும் நோய்களுக்கு அறிகுறியாக வித்தியாசமாகவும் ஏற்படுவதுண்டு. தலைவலி சாதாரண காரணத்தினாலும் வரலாம், தீவிர பாதிப்பினாலும் வரலாம்.
மண்டை ஓட்டைச் சுற்றியிருக்கும் தமனி, சிரை, தோல் வழியேதான் முதலில் வலி உணரப்படுகிறது. பிறகு ரத்தக் குழாய்களின் மூலம் பரவி தலையின் இருபுறங்கள் மற்றும் கழுத்துக்கும் பரவுகிறது. கண்கள், மூக்குத் துவாரங்கள், பற்கள் வழியாகவும் தெரியலாம். பெரும்பாலான தலைவலிகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விட முடியும்.
சாதாரண தலையிடியானது தலையில் அமைந்துள்ள (முகம் உட்பட) தசை நார்கள் அதிகமாக இறுக்கப்படுவதினால்தான் பெரும்பாலான தலைவலிகள் ஏற்படுகின்றன. தசை நார்கள் அதிக நேரம் இழுக்கப்படும்போது, கடைசியில் அது தலைவலியாக உருவெடுக்கின்றது. தலைவலி வருவதற்கு கடுமையான உழைப்பு, ஓய்வின்மை, உடல் சூடு, வயிற்று நோய்கள், போதிய உணவின்மை, மன அழுத்தம் ஆகியவை காரணங்களாகும்.
அத்துடன், உயிராபத்தை விளைவிக்கக்கூடிய நிலைமைகளான மூளையுறை அழற்சி (meningitis), மூளையளற்சி (encephalitis), மிக உயர் இரத்த அழுத்தம், மூளைக் கட்டிகள் போன்றவற்றின் அறிகுறியாகவும் தலையிடி ஏற்படுகின்றது. பெண்களிடையே மாதவிலக்கு காலங்களில் காணப்படும் மிகப் பெரும்பாலான தலைவலிகளுக்கு, பெண்மை இயக்குநீர் (estrogen) அளவின் ஏற்ற இறக்கமே காரணமாகும். பொதுவாக சிக்கலற்ற தலைவலிகளுக்கு மருந்துக் கடைகளில் இலகுவாக வாங்கக்கூடிய ஆஸ்பிரின் பாராசிட்டமால், இபுபுரோபின் போன்ற வலிநீக்கி மாத்திரைகளே போதுமானதாக இருக்கக்கூடும்.
ஆனால், சில குறிப்பிட்ட வகைத் தலையிடிகளுக்கு வேறு பொருத்தமான மருத்துவ முறைகள் தேவைப்படக்கூடும். இத்தலைவலியானது, மன அழுத்தம், சிலவகை உணவுகள் போன்ற ஏதாவது ஒரு காரணியுடன் தொடர்புபடுத்திக் கண்டறிய முடியுமானால் அவற்றை தவிர்ப்பதன் மூலம் தலையிடி ஏற்படாது தடுக்கலாம்.
மன உளைச்சல் தலைவலி
கழுத்தின் பின் தசைகளில்தான் இந்த வலி உருவாகும். இரவு உறக்கத்திற்குப் பிறகு தசைகள் இறுகி வலி ஆரம்பமாகும். ஒவ்வொரு முறை இந்த மன உளைச்சல் ஏற்படும்போதும் கழுத்தின் பின் தசையில் இறுக்கம் ஏற்பட்டு வலி ஆரம்பமாகும்.இரண்டு பக்கமும் வலி வரலாம். தலையை இறுக்கமாகப் பிடித்தாற்போல் இருக்கும். நீண்ட காலமாக இருக்கும். 25 – 30 வயதில் ஆரம்பிக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வரும்.
சைனஸ் தலைவலி
மூக்கு அடைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். தலைவலி இருக்கும். மூக்கிலிருந்து நீர் வடியலாம். குனிய முடியாது.