U19 WC 2024 : யாரு தம்பி நீ.. 17 வயசுல இவ்வளவு முதிர்ச்சியா.. 71 பந்துகளில் சதம்.. வெ.இ எதிர்காலமே!
டர்பன்: யு19 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 17 வயதாகும் இளம் வீரர் ஜுவல் ஆண்ட்ரூ 96 பந்துகளில் 130 ரன்களை எடுத்து கடைசி வரை போராடிய சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
யு19 உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்கா மண்ணில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் நடைபெற்ற 2வது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பாஸ்கர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ப்ரிடோரியஸ் – ஸ்டால்க் கூட்டணி களமிறங்கியது.
முதல் விக்கெட்டுக்கு 26 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ஸ்டால்க் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ப்ரிடோரியஸ் 34 பந்துகளில் ஒரு சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 40 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் சீரான இடைவேளையில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 145 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது டிவான் மரைஸ் மற்றும் கேப்டன் ஜுவன் ஜேம்ஸ் இருவரும் கூட்டணி அமைத்து அதிரடியாக ரன்களை சேர்த்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 7வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் ஜேம்ஸ் 47 ரன்களும், மரைஸ் 38 பந்துகளில் 4 சிக்ஸ், 4 ஃபோர்ஸ் உட்பட 65 ரன்களும் சேர்த்தனர். இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்களை குவித்தது.
இதன்பின் இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பவே அதிர்ச்சியாக அமைந்தது. 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 10 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் எல்லைக்கே சென்றது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜுவல் ஆண்ட்ரூ – நேதன் சீலி கூட்டணி களத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
ஒரு பக்கம் நேதன் சீலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, இன்னொரு பக்கம் ஆண்ட்ரூ ருத்ரதாண்டவம் ஆடினார். ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரிகள் பறந்து கொண்டே இருந்தது. இதன் மூலம் 40 பந்துகளில் அரைசதம் அடித்த ஆண்ட்ரூ, அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றினார். தென்னாப்பிரிக்கா பவுலர் ஆலிவர் வீசிய ஒரே ஓவரில் 17 ரன்களை விளாசி வெளுத்து கட்டினார் ஆண்ட்ரூ. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் 150 ரன்களை எட்டியது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஆண்ட்ரூ 71 பந்துகளில் சதம் அடித்து அசத்தல், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோரும் 31 ஓவர்களிலேயே 200 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய அவர் 96 பந்துகளில் 3 சிக்ஸ், 14 ஃபோர்ஸ் உட்பட 130 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 40.1 ஓவர்களில் 254 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. 17 வயதே ஆகும் ஜுவல் ஆண்ட்ரூ யு19 உலகக்கோப்பை தொடருக்கு மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுத்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.