அயோத்தியில் எலெக்ட்ரிக் ஆட்டோ சேவையை தொடங்கியுள்ள ஊபர் நிறுவனம்!

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமைப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நாட்டின் இலக்கை நோக்கி மற்றுமொரு அத்தியாயம் தொடங்கியுள்ளது. இந்தியாவின் மாபெரும் டாக்ஸி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஊபர் நிறுவனத்தின் சார்பில் அயோத்தி நகரில் எலெக்ட்ரிக் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா, வரும் திங்கள்கிழமை நடைபெறுகின்ற நிலையில் அங்கு இனிவரும் காலங்களில் ஆன்மீகச் சுற்றுலா பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த சேவையை ஊபர் நிறுவனம் தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் இந்த ஆட்டோ சேவை தொடங்கப்பட்டது. ராமர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் வரவிருக்கும் நிலையில், அவர்களுக்கு குறைவான கட்டணத்தில் வாகனப் போக்குவரத்து சேவை கிடைக்கும் எனத் தெரிகிறது. ஆன்மீக பூமியான அயோத்தி நகருக்கு பல்வேறு விதமான போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஊபர் நிறுவனத்தின் மற்றுமொரு சேவையான ஊபர்கோ சார்பில், வெளியூர்களில் இருந்து மிகக் குறைவான கட்டணத்தில் அயோத்தியை நோக்கி கார் டாக்ஸி சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நெடுந்தொலைவு பயணச் சேவைகளை வழங்கும் ஊபர் இண்டெர்சிட்டி சார்பிலும் அயோத்தியை நோக்கி வாகனச் சேவைகளை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பிராந்திய தொடர்பு மற்றும் வளர்ச்சி

இந்தியாவின் பிராந்திய நகரெங்கிலும் போக்குவரத்து தொடர்பு வசதிகளை தொடங்குவதற்கு ஊபர் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற, பல்முனை போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு அந்த நிறுவனம் தயாராகி வருகிறது. ஊபர் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்கு ஆசியா பிரிவுத் தலைவர் பிரபஜீத் சிங் இதுகுறித்து கூறுகையில், “ அயோத்தி மிக முக்கியமான இடமாக பார்க்கப்படும் நிலையில், அங்கு வரக் கூடிய பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.

இதன் மூலமாக உள்ளூர் மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். அயோத்தி நகர மக்களுக்கு சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கவும், நீடித்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார். தற்போது நாடெங்கிலும் 125 நகரங்களில் ஊபர் நிறுவனத்தின் சார்பில் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஊபர் நிறுவனத்தின் சார்பில் கார், ஆட்டோ, பைக் சேவைகள் பரவலாகவும், சில இடங்களில் சுற்றுலாப் பேருந்து சேவையும் வழங்கப்படுகின்றது.

பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகிய இரு தரப்பு பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தொழில்நுட்ப ரீதியாகவும் ஊபர் நிறுவனம் மேற்கொள்கிறது. அந்த வகையில் லொகேஷன் ஷேரிங் மிக முக்கியமான நடவடிக்கையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *