உதய் சஹாரன், சச்சின் தாஸ் காம்போ – த்ரில் வெற்றியோடு இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
அண்டர்19 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில், கேப்டன் உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. கடைசியாக நடந்த அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியனானது. இந்த அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் நியூசிலாந்து, நேபாள், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நமீபியா, ஜிம்பாப்வே, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, அயர்லாந்து என்று 16 அணிகள் குரூப் ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளாக பிரிந்து விளையாடின.
இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் சிக்ஸ் குரூப் 1 மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று குரூப் 2க்கு முன்னேறின. அதன்படி, இந்தியா அண்டர்19 விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று சூப்பர் சிக்ஸ் சுற்று 1க்கு தகுதி பெற்றது. இதில் இந்தியா உடன் இணைந்து பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, அயர்லாந்து, நேபாள் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதே போன்று சூப்பர் சிக்ஸ் குரூப் 2விலும் 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், குரூப் 1 பிரிவில் இடம் பெற்ற இந்தியா அண்டர் 19, நேபாள் அண்டர் 19 அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாயு19 மற்றும் தென் ஆப்பிரிக்காயு19 அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அண்டர் 19 அணியானது 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக பிரிட்டோரியஸ் 76 ரன்கள் எடுத்தார். ரிச்சர்டு ஒயிட் செலஸ்ட்வேன் 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் 245 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடியது. இதில், தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். கேப்டன் உதய் சஹாரன் 81 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். சச்சின் தாஸ் 96 ரன்கள் எடுக்கவே இந்தியா 48.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இந்தியா அண்டர் 19 இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும், 11 ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.