‘உதயநிதி ஸ்டாலின் ஒன்றும் கருணாநிதி இல்லை… கத்துக்குட்டிதான்’ – எல்.முருகன்

பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா கோவை ரயில் நிலையத்தில் இன்று (டிச.24) நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் (L Murugan), கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்கா, உதவி மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “தமிழகத்தின் தொழில்துறை பகுதிகளான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இப்பகுதிகளில் ரயில்வே துறை மேம்பாட்டுக்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை – பொள்ளாச்சி இடையே இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, வேலைக்காக தினந்தோறும் கோவை – பொள்ளாச்சி இடையே ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பெரிதும் உதவும்” என்றார்.

10 புதிய வழித்தடங்ககள்

இந்நிகழ்வில் பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், “இந்த ரயில் சேவையை வரவேற்பதாகவும் அதே சமயம் பொள்ளாச்சி – மேட்டுப்பாளையம் இடையிலான மெமோ ரயில் இயக்கம், மங்களூரு – கோவை இடையிலான இன்டெர்சிட்டி ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பது, சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்தி செல்வது உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “கோவை – பொள்ளாச்சி (Coimbatore To Pollachi Train) இடையே முன்பதிவில்லா ரயில் சேவை வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, ஒரே மாதத்தில் மிக வேகமாக மத்திய ரயில்வே அமைச்சரால் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. இந்தாண்டு பட்ஜெட்டில் 6000 கோடி ரூபாய் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 புதிய வழித்தடங்ககள் கொடுக்கப்பட்டுள்ளது.

‘உதயநிதி கத்துக்குட்டி’

காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 800 கோடி ரூபாய் தான் 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், உதகை, திருப்பூர், சேலம் உட்பட 75 ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன.

உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) கருணாநிதி கிடையாது. இவர் அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார். அரசியலில் அவர் நிறைய கற்றுக் கொள்ள வேண்டிள்ளது. பக்குவப்பட்ட தலைவராக நடந்து கொண்டு மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசுக்கு வேலை செய்யும்போது, தமிழ்நாடு அரசுக்குதான் நல்ல பலன் கிடைக்கும். அதை விட்டு உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பது அமைச்சருக்கான தராதரத்தை குறைத்துவிட்டார் என்றுதான் கருதுவேன்.

முதலில் வருவது பாஜக -ஆர்எஸ்எஸ்

எந்த இயற்கை பேரிடர் என்றாலும் முதலில் நிற்பது பாஜகவும் ஆர்எஸ்எஸ் (BJP – RSS) அமைப்பும்தான். அது எங்களுடைய பாரம்பரியத்திலேயே இருக்கிறது. கேள்வி கேட்ட பிறகு களத்தில் சென்று நிற்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் பிரச்சனை வரும் என்பதை அறிந்து முன்கூட்டியே செயல்படுவது பாஜக. மத்திய அரசின் அனைத்து மீட்பு குழுக்களும் பேரிடரின் போது அனுப்பப்பட்டு உதவி செய்யப்பட்டது. அதேபோல் பொதுவாக பேரிடர் ஆய்வு செய்ய வரும் மத்திய அரசு குழு ஒரு வாரத்திற்கு பிறகுதான் வருவார்கள். இப்போது உடனடியாக வந்து ஆய்வு செய்துள்ளனர்” என கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *